படம்: கடாவர்
நடிப்பு: அமலா பால், ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா
தயாரிப்பு: அமலாபால்
இசை: ரஞ்சின் ராஜ்
கதை: அபிலாஷ் பிள்ளை
ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்
இயக்கம்: அனூப் பணிக்கர்
பி ஆர் ஒ: ஸ்ரீவெங்கடேஷ்
ரிலீஸ்: டிஸ்னி ஹாட் ஸ்டார் (ஒ டி டி)
பிரபலமான மருத்துவர் மர்மமான முறையில் காருடன் சேர்த்து எரித்துக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைக்கும் சிறையில் இருக்கும் வெற்றி (திரிகுன்)-க்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி கொலை செய்ய முடியும் என்ற கேள்வியும் எழவே, இது தொடர்பான விசாரணையில் தீவிரம் காட்டி வரும் காவல் துறைக்கு உதவுகிறார் போலீஸ் சர்ஜன் பத்ரா தங்கவேல் (அமலா பால்). இறுதியில் கொலைக்காரன் கண்டுபிடிக்கப்பட்டானா? கொலைக்கான காரணம் என்ன என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லருடன் சொல்லும் படம்தான் ‘கடாவர்’. நேரடி ஓடிடி ரிலீசான இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், தானே முன்வந்து தயாரித்தும் இருக்கிறார் அமலா பால். கிராஃப் கட்டிங், கையில் கத்தி, கண்ணில் வேகத்துடன் கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் உதவுகிறார். சில இடங்களில் அவரது நடிப்பு கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. அவரைத் தவிர, ஹரிஷ் உத்தமன் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.
ஆனால், அவருக்கான எழுத்தை இன்னும் ஆழப்படுத்தியிருக்கலாம். காரணம், அமலாபால் முன்னின்று எல்லாவற்றையும் கண்டுபிடிக்கவும், காவல்துறை அதிகாரியான ஹரிஷ் உத்தமன் வெறுமனே வந்து செல்வது போலவும் தான் தோன்றுகிறது. அதுல்யா ரவி, வினோத் சாகர், ரித்விகா, திரிகன் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பின் மூலம் த்ரில்லருக்கான தீனியை கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லருக்கான அனைத்து முகாந்திரமும் கதையில் இருப்பதை உணர முடிகிறது. ஆனால், அதன் திரைக்கதையமைப்பு காட்சிகளுக்கான விறுவிறுப்பை கூட்ட தவறியிருக்கிறது. உதாரணமாக, அதுவரை கொலைக்கான காரணத்தை எதிர்நோக்கியிருந்த பார்வையாளர்களை இயக்குநர் வலுவான காரணத்துடன் திருப்திபடுத்த வேண்டும். காரணம், ஓகே என்றாலும், காட்சியமைப்பு அதற்கு கைகொடுக்கவில்லை.
உணர்வுபூர்வமாக பார்வையாளனை தக்க வைக்கும் அழுத்தமான காட்சியமைப்பு இல்லாததால் படத்துடன் ஒன்றுவது பெரும் சிக்கல். படத்தின் சில ட்விஸ்ட் கவனிக்க வைக்கின்றன. அதேபோல சில காட்சிகள் ஈர்க்கும் வகையில், சிலவை அமெச்சூர் தனமாகவும் படமாக்கப்பட்டுள்ளன. திரையில் கொலைகாரனை கண்டுபிடிக்க கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பரபரப்பு, பார்வையாளரை தொற்றவில்லை என்பதுதான் பெரிய சிக்கல்.
அபிலாஷ் பிள்ளையின் எழுத்துக்கு அனூப் பணிக்கர் காட்சி வடிவம் கொடுத்திருக்கிறார். குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான புலனாய்வுக் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். தவிர, மெடிக்கல் க்ரைம் களத்தை உயிராக கொண்ட கதையில் அது குறித்து ஆழமாக பேசப் படாததது ஏமாற்றம். காட்சியின் ஆன்மாவை பார்வையாளர்களுக்கு கச்சிதமாக கடத்துவதில் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு பெரும் பங்கு வகிக்கிறது.
தேவையான இடங்களில் ஒலிக்கும் ரஞ்சின் ராஜின் பின்னணி இசை காட்சிகளில் தவறவிட்ட விறுவிறுப்பை கூட்ட முயற்சிக்கிறது. முக்கியமாக கலை இயக்கத்தின் பங்கு படத்திற்கு பெரும் பலம். பிணவறை, அதன் வடிவமைப்பு, சடலங்கள் என தத்ரூபமான செட்டுகள் நம்மை உண்மையாக அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. அந்த வகையில் படத்தை தூணாக தாங்கி நிற்கிறது கலை இயக்கம்.
கடாவர் – வார்த்தையில் மட்டுமல்லாமல் படத்திலும் வித்தியாசம் காட்டியதற்காக ஒரு சபாஷ் போடலாம்.