Monday, September 9
Shadow

சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நாயகி சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை படக்குழுவினர் (நவம்பர் 12) இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.