Thursday, December 5
Shadow

ஜனவரி 8-ல் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்!

ஹோம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ் கதாநாயகனாகத் தோன்றும் இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இப்படத்தில் ஆதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் செய்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் இது.

கதைப்படி ஆதீரா அச்சமற்றவன், துணிச்சலானவன், இரக்கமற்றவன். இந்த கதாபாத்திரமாக மாற உடல்தகுதியை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருந்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் சுமார் 1.5 மணி நேரம் எனக்கு மேக் அப் செய்ய வேண்டியிருந்தது. அதுதவிர மனரீதியாக நிறைய பயிற்சிகளைச் செய்தாலே அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்குள் என்னால் நுழைய முடிந்தது.

நான் வில்லனாக நடித்திருக்கிறேன். வில்லன் கதாபாத்திரங்களைச் செய்வதில் எனக்கு அலாதி பிரியமுண்டு. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு ஆற்றல் கொண்டது. அது கேட்கும் ஆற்றலை நடிகனாக நாம் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

கேஜிஎஃப்-1 படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. அதேபோல் இந்தப் படத்திலும் பஞ்சமில்லாமல் அதிரடி காட்சிகள் இருக்கும். குறிப்பாக நானும் யாஷும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

பிரசாந்த் நீல் மிகச்சிறந்த பன்பாளர். அவருடன் பணியாற்றியது மிகவும் சுமகுமான பயணம். நான் முதன்முறை அவருடன் இணைந்திருந்தாலும், எனக்கு எந்த நெருடலும் ஏற்படவில்லை. நான் இதற்கு முன்னதாகவும் கேஜிஎஃப் உலகில் இருந்தது போலவே உணர்ந்தேன். நாங்கள் நிறைய பேசினோம். அவரது வேலை நேர்த்தியும், இயக்குநர் பணியும் எனக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்தது.

கேஜிஎஃப்-சேப்டர் 2-வில் பணியாற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டவுடன் நான் உற்சாகமாகிவிட்டேன். எனக்கான கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாக இருந்ததால் உடனே நான் ஒப்புக் கொண்டேன். ஒரு கதை தான் கதாபாத்திரத்தின் உயிர். ஆதிரா கதாபாத்திரத்தின் முரட்டத்தனமும் கொடூரமும் என்னை உடனே இதை ஏற்றுக் கொள்ளவைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.