‘வேட்டையன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Kishore, Ritika Singh, Dushara Vijayan, G M Sundar, Abirami, Rohini, Rao Ramesh, Ramesh Thilak, Rakshan
Directed By : T.J. Gnanavel
Music By : Anirudh Ravichander
Produced By : Lyca Productions – Subaskaran
மனித உரிமைகளின் மகத்துவத்தை உணர்த்திய ‘ஜெய் பீம்’ படத்துக்கு பிறகு, இயக்குநர் த.செ.ஞானவேல் இதில் ரஜினிகாந்துடன் கைகோத்திருக்கிறார். ஒரு படைப்பாளியாக, மனித உரிமை, சமத்துவம், சமூக நீதி ஆகிய விழுமியங்கள் மீதான தனது அர்ப்பணிப்பை விட்டுக்கொடுக்காமல், அதேநேரம் ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜுக்கு தீனி போடும் வகையிலான கதையை அமைத்திருக்கிறார். கிருத்திகாவுடன் இணைந்து ஞானவேல் எழுதியிருக்கும் திரைக்கதை, பல சமூக-அரசியல் பிரச்சினைகள் மீது ஒளிபாய்ச்சும் அடுக்குகளையும் வெகுஜன திரைக்கதைக்கு தேவையான சுவாரஸ்ய தருணங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. அந்த வகையில், மாஸ் மற்றும் கிளாஸ் பார்வையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் அம்சங்கள் படத்தில் அதிகம் உள்ளன.
ரஜினிக்கான வழக்கமான பில்டப்களுடன் முதல் பாதி பரபரப்பாக தொடங்கி போதைப் பொருள் கும்பல் குறித்த விசாரணை, பிறகுநடக்கும் கொலை, அதுதொடர்பான விசாரணை என த்ரில்லர் பாணிக்கு தடம் மாறுகிறது. இடைவேளையில் நிகழும் திருப்பம் ஒரு முக்கியமான முரணை ஏற்படுத்தி, இரண்டாம் பாதியை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது.
என்கவுன்ட்டர்களை ஆதரிக்கும் பொதுப் புத்தி மீதான விமர்சனம், அதன் பின்னால் உள்ள அரசியல், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் உள்ளிட்ட விஷயங்கள் படத்தில் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. அதற்கு பல இடங்களில் கைகொடுக்கின்றன, கூர்மை யான வசனங்கள். திரைக்கதையில் லாஜிக் பிழைகளும், நீளமும் பெருங்குறைகள். இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வேறுசில படங்களை நினைவுபடுத்துகின்றன. பிரதான வில்லன் கதாபாத்திரமும், அவரது செயல்பாடுகளும் வழக்கமான கார்ப்பரேட் வில்லன் சட்டகத்துக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன.
கடமை உணர்வும், சமூக அக்கறையும் மிகுந்த என்கவுன்ட்டர் போலீஸாக ரஜினிகாந்த் துடிப்பு குறையாமல் நடித்திருக்கிறார். குற்ற உணர்வால் துடிக்கும்காட்சியிலும், எமோஷனல் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். ரஜினிக்கு நேர் எதிரான மனித உரிமைப் பார்வையை வெளிப்படுத்தும் நீதிபதி சத்யதேவ் கதாபாத்திரத்துக்கு அமிதாப் பச்சனின் நடிப்பு வலுசேர்க்கிறது.
ரஜினியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக ஃபஹத் ஃபாசில் சுவாரஸ்யம் கூட்டுகிறார். கார்ப்பரேட் வில்லனுக்கான தோரணையை சரியாக வெளிப்படுத்துகிறார் ராணா டகுபதி.துஷாரா விஜயன், ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியர், காவல் துறை அதிகாரிகளாக ரோகிணி, கிஷோர், ரித்திகா சிங், கார்ப்பரேட் அதிகாரி அபிராமி ஆகியோரின் கதாபாத்தி ரங்களும் கதைக்கு வலு சேர்க்கின்றன.
அனிருத்தின் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம். எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பும் நெருடல் இல்லாத காட்சி அனுபவத்தை சாத்தியப் படுத்துகின்றன. சில குறைகள் இருந்தாலும், என்கவுன்ட்டர் கொலைகளுக்கு எதிரான குரலை அழுத்தமாக பதிவு செய்து, ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கும் ‘வேட்டையனை’ வரவேற்கலாம்.
மொத்தத்தில், ‘வேட்டையன்’ படத்திற்கு வெற்றி நிச்சயம்.