நடிகர் சிம்பு ‘பத்து தல’ படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து, இந்தாண்டு இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, கலையரசன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடிக்கின்றனர்.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஷூட்டிங் இன் ப்ராக்ரஸ்.. பத்து தல’ என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ‘பத்து தல’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்தப் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து முடிந்துள்ளது.
’பத்துதல’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்தபோது படப்பிடிப்புக்கு நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இயக்குநர் கிருஷ்ணா மற்றும் சிம்பு ஆற்றின் கரையில் பேசுவது போல இருக்கும் புகைப்படமும், கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு இயக்குநர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
’பத்துதல’ திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.