11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால்! இந்த விழா போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடத்துவோம் – நடிகர் விஷால்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (06.11.2022) 11 ஜோடிகளுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலையுடன் சீர்வரிசையோடு இலவச திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:
இங்கு வந்திருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும், திருமணம் ஆன 11 தம்பதிகளுக்கும்,
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய என் தம்பி கண்ணனுக்கும்,
மற்ற மாநில செயலாளர்கள் அத்துணை பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மாநகராட்சி ஊழியர்ர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹரி, கண்ணன் மற்றும் 22 பேருக்கும் நன்றி. ஏனென்றால் எனக்கு பட்டு வேஷ்டி சட்டை அணிவது மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அது பயன்படும். பல மாதங்களுக்குப் பிறகு இன்று எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு நாள் கண்ணன் இந்த விழாவை பற்றி யோசனை கூறினார். ஆனால் எனக்கு படப்பிடிப்பில் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருந்தது. சிகிச்சைக்காக கேரளா சென்று வந்தேன். பின்பு இந்த தேதியை தேர்ந்தெடுத்த முடிவு செய்தோம். இன்று என் குடும்பம் பெரிதாகி விட்டது. எனக்கு 11 தங்கைகள் கிடைத்திருக்கிறார்கள். தங்கை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இவர்களை நான் எனது உடன்பிறந்த தங்கைகள் போலவே பார்க்கிறேன். ஆகவே, மாப்பிள்ளைகள் அனைவரும் என்னை வேட்டியை மடித்துக் கட்ட வைத்து விடாதீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம் என்று இல்லாமல் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன். என் தங்கைகளிடம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். அதற்கு மாப்பிளைகளாகிய நீங்கள் தான் முழு பொறுப்பு.
என் தங்கைகளை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதேபோல் இந்த 11 தம்பதிகளின் குழந்தைகளுடைய கல்வி செலவு மற்றும் எதிர்காலத்தை
தேவி அறக்கட்டளை பார்த்துக் கொள்ளும். அதற்காக நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் அனைவரின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தால் நான் தானாகவே மகிழ்ச்சி அடைவேன்.
மக்கள் நல இயக்கம் தொடங்கியதற்கு ஒரே ஒரு விஷயத்திற்காக தான். இந்த நோக்கமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த சமுதாயத்திற்கு இறங்கி வேலை செய்து நல்லது செய்ய வேண்டும் இன்று ஒரு வார்த்தை தான் கூறினேன். யார் இந்த மனநிலையில் இருக்கிறீர்களோ அவர்கள் என்னுடன் வாருங்கள் என்று கூறினேன். ஏனென்றால், ஒரே ஆளாக என்னால் இதை செய்ய முடியும். ஆனால், பல கைகள் கோர்த்தால் பலருக்கு இந்த விஷயம் சென்று சேரும் என்று நம்பி இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம்.
சொந்த தம்பிக்கு நன்றி சொல்வது தவறு. ஆகையால், ஹரிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன். எது சொன்னாலும் அதை நன்றாக அலசி ஆராய்ந்து சரியான ஆட்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் சேருவதற்கான விஷயங்களை செய்தோம்.
அதேபோல், சௌந்தரும் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான நோட்டுகள் பேனா பென்சில்கள் வாங்கி கொடுக்கும்படி கேட்டார். அதையும் செய்தேன். பொதுவாக எந்த ஒரு கடை திறப்பு விழாவிற்கு நான் செல்லும் போதும் எனக்கு கொடுக்கும் தொகையை அப்படியே இது போல தேவைப்படும் மாணவர் மாணவியர்களுக்கு உதவி புரிந்து வருகிறேன். அதே கடை உரிமையாளர்களிடம் நீங்கள் எனக்கு கொடுக்கும் தொகை 100 குழந்தைகள் படிப்பதற்கு உதவும் என்று கூறுவேன். இது போன்ற திறப்பு விழாக்களை அனைத்தும் நான் எப்போதும் ஒப்புக்கொண்டு வருகிறேன். இது போல் ஒரு விழா நடத்துவதற்கு இந்தப் பகுதியில் என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணமில்லை. மனதார செய்து வருகிறேன். இதற்கு உதவி புரிந்த திருவள்ளூர் மாவட்ட தம்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது போல் தொடர்ந்து அடுத்த மாவட்டங்களுக்கும் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
அம்மாக்கள் எங்களுக்கு எப்போது பட்டுப் புடவை வாங்கி கொடுப்பாய்? 11 பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறாய்! நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்று கேட்டார்கள். ஒரு வார்த்தை சொன்னால் அதிலேயே நிற்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். கடவுளை நம்புகிறேன், உங்களை நம்புகிறேன், இந்த பூமியை நம்புகிறேன், அடுத்த வருடம் எத்தனை தடைகள் வந்தாலும், மனது சுத்தமாக இருந்தால்… லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக தீர்ப்பு வரும், அதுவும் நல்ல தீர்ப்பு வரும். அதுக்காக சங்கத்தின் கட்டிட பணிகளை தொடங்கி இருக்கிறோம். இடம் பற்றாக்குறையாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் வரவேண்டும். ஒவ்வொரு வருடமும் அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சுமார் 3500 நாடக நடிகர் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கத்தினர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு முதல் ஓடி உழைத்து வருகிறோம். இன்னும் பாதி தூரம் இருக்கிறது. அதை கடந்து கட்டிடம் கட்டி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி வெற்றி அடைவோம் என்று நம்புகிறோம்.
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நான் வாழ்த்துவதை விட இங்கு வந்திருக்கும் நிறைய அம்மாக்கள் மனதார வாழ்த்தினால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இது போன்று விழாக்களுக்கு சென்று வந்த பின் படப்பிடிப்பிற்கு செல்லும் போது உற்சாகமாக இருக்கும். என்னைப் பற்றி யார் என்ன கூறினாலும் நான் காதில் வாங்கிக் கொள்ள மாட்டேன். என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை கடவுள் வந்து சொல்கிறார் என்று நினைத்து அதை அப்படியே செய்து விடுவேன். சமீபத்தில் கூட நான் காசிக்கு சென்று வந்தது அரசியல் ஆக்க பார்த்தார்கள். ஆனால், அரசியல் நோக்கத்திற்காக காசி செல்லவில்லை. சில விஷயங்களை அங்கு சென்றால் தான் உணர முடியும். ராமகிருஷ்ணா மற்றும் மனோபாலா சாருக்கு நன்றி. டிசம்பர் 22ஆம் தேதி நான் நடித்த லத்தி படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
மேலும், சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் என்னிடம் வந்து, அண்ணா அண்ணி பென்ஸ் மற்றும் ஆடி கார் போன்ற விலையை வந்த கார்களில் வரும் மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் என்னை சேர்த்து விடுங்கள். நான் நன்றாக படித்து என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். கல்வி என்று வந்த பிறகு நான் பிச்சை எடுக்க தயங்க மாட்டேன். அவர் கேட்டுக் கொண்டது போல் நான் கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்தேன். சில மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்தார். அண்ணா என்னுடைய முதல் செமஸ்டரில் நான் தான் முதல் மார்க் வாங்கி இருக்கிறேன் என்றார். இதை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், அந்த பெண்ணிடம், நீ மூன்று வருடம் கழித்து தங்கப்பதக்கம் வாங்க வேண்டும். அதன் பிறகு உன்னை போல் இருக்கும் இன்னொரு பெண்ணை நீ படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.
இந்த விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த பாபு சாருக்கு நன்றி அவருடைய நல்ல மனதை நான் புரிந்து கொண்டேன். இனிமேல் நான் அவரை விட மாட்டேன். இது போன்ற விழாக்களுக்கு தொடர்ந்து அவரை அழைப்பேன் என்றார்.