நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு
தெலுங்கு திரை உலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான ‘தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘ஃபலக்னுமா தாஸ்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் நாயகனும், இயக்குநருமான விஷ்வக் சென் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தாஸ் கா தம்கி’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட
பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அன்வர் அலி கவனிக்க பிரசன்ன குமார் பெசவாடா வசனம் எழுதியிருக்கிறார். அழகான காதலுடன் கூடிய திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை வன்மயே கிரியேஷன்ஸ் மற்றும் விஷ்வக் சென் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்களில் சார்பில் கராத்தே ராஜு தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. முன்னோட்டத்தில் இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ‘தாஸ் கா தம்கி’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அன்று வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.