Sunday, October 13
Shadow

‘வரலாறு முக்கியம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

பெண்ணைக் காதலிக்க வைக்கும் ஓர் இளைஞனின் ‘உன்னதமான’, ‘உயர்வான’ போராட்டமே ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஒன்லைன். கோயம்புத்தூரில் ஸ்கூல் வாத்தியாராக இருக்கும் கோபால் (கே.எஸ்.ரவிக்குமார்) மகன் கார்த்தி (ஜீவா). வேலையில்லாமல் சுற்றித் திரியும் அவருக்கு முழுநேர வேலையே பெண்களை ‘ஸ்டாக்கிங்’ செய்வது. அதை பொழுதுபோக்காக கொண்டிருக்கும் கார்த்தியின் தெருவில் கேரள பெண் ஒருவர் குடியேற, அவரை ‘ஸ்டாக்கிங்’ செய்து காதலிக்கத்தொடங்குகிறார். இறுதியில் அவரை கரம்பிடித்தாரா? இல்லையா? என்ற மிகவும் புதுமையான கதைதான் ‘வரலாறு முக்கியம்’.

பாகவதர் காலம் தொட்டு எடுக்கப்பட்ட இந்தக் கதையை 2022-ம் ஆண்டிலும் படமாக்கியிருக்கும் இயக்குநரின் மன தைரியம் பாராட்டத்தக்கது. முன்பு கொண்டாட்டப்பட்ட இந்தக் கதைக்களத்திலிருந்து தமிழ் சினிமா விலகி ‘இனியும் ஸ்டாக்கிங்’கை ரொமான்டிசைஸ் செய்யக்கூடாது என விழித்தெழுத்துள்ளது. அதை இழுத்து மீண்டும் பிற்போக்குத்தனத்திற்கு வழிவகுக்கும் படமாக உருவாகியுள்ளது ‘வரலாறு முக்கியம்’.

சந்தோஷ் ராஜன் இயக்கியிருக்கும் இப்படம் மதம்பிடித்த யானையாக திசையின்றி அலைந்து பெயரளவுக்கு கூட சுவாரஸ்யமற்று நகர்கிறது. ‘அம்மா நீங்க என்ன செவ்வா கிரகத்துக்கு அனுப்புறீங்கன்னு பேசுனீங்க. சோ நான் வீட்ட விட்டு வெளியே போறேன்’ என ஜீவா கோபித்துக்கொண்டு சொல்லும் காரணமும் அந்தக் காட்சியும் அடடே! ரகம்.

விடிவி கணேஷ் கதாபாத்திரம் காமெடி என்ற பெயரில் ஆபாசங்களுக்காக மட்டுமே படம் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளதை படத்தைப்போல ரசிக்க முடியவில்லை. ஷாரா, மொட்ட ராஜேந்திரன் கதாபாத்திரங்கள் வீண். கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் இருவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். நாயகிகள் காஷ்மீரா, பிரக்யா இருவரும் வெறும் காதலுக்காக மட்டுமே வந்து செல்கின்றனர். ஜீவா வழக்கமான நடிப்பை பதிவு செய்கிறார். மலையாளத்திலிருந்து கொண்டு வந்த சித்திக்கின் கதாபாத்திரமும் முறையாக பயன்படுத்தப்படவில்லை.

படத்தில் நாயகனின் தங்கையை சிலர் காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்கின்றனர். அதை தட்டிக்கேட்டு சண்டையிடும் நாயகன், இதையேத்தான் நாயகியிடமும் செய்கிறார். நாயகியை துரத்தி துரத்தி ஸ்டாக்கிங் செய்து காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார். தங்கைக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா?. தட்டிக் கேட்க வரும் தந்தையையும் மிரட்டுகிறார். என்ன பாஸ் இது!

அதேபோல படத்தின் ஆரம்பத்தில் தன் தங்கையிடம் ‘பசங்கள ஏமாத்தாம ஒருத்தன லவ் பண்ணு’ என கூறும் நாயகன், இரு நாயகிகள் ஒருவரை காதலித்து மற்றவரை காதலிப்பதாக நடித்து ஏமாற்றச் செய்கிறார். படத்தின் அடிப்படை கதையை எடுத்துக்கொண்டால் அந்தக் கதையின் உன்னத நோக்கம் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்வது. இந்த ஒற்றை கருவை திரைக்கதையாக்கும்போது எந்த வித சுவாரஸ்யமோ, திருப்பமோ இல்லாமல் கடமைக்கு காட்சிகளை அடுக்கியிருப்பது சோர்வு.

‘கொழந்தியா குரங்கு மாதிரி இருந்தாலும் நம்ம பசங்க விடமாட்டாங்க’ போன்ற முகம் சுழிக்க வைக்கும் வசனங்கள் என மொத்தப் படமும் பெண்ணுடலை பண்டமாக்கும் வகையில் பிற்போக்குத்தனத்தின் உச்சமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையில் வரும் சென்டிமென்ட் வசனங்கள் சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நகர, இடையே திணிக்கப்பட்ட பாடல்களும், சண்டைக்காட்சிகளும், ‘லவ் ஃபெயிலியர்’ சாங் ஒன்றும் பெரும் சோதனை.

உண்மையில் 90-களில் 2000-களில் கூட இதே கதைக்களத்தில் ரசிக்கும் காட்சிகளில் படங்கள் வந்துள்ளன. ஆனால், 2022-ல் அதாவது பெண்ணுடல் மீதான அத்துமீறல் வன்முறைகள் குறித்து பேசும் ‘அனல் மேலே பனித்துளி’ போன்ற படங்கள் வரும் சூழலில், இதுபோன்ற சினிமாக்கள் பெரும் பின்னடைவே.

ஷான் ரஹ்மான் பின்னணி இசை படத்திற்கு சில காட்சிகள் ஊக்கம் கொடுத்திருக்கிறது. சக்தி சரவணன் ஒளிப்பதிவிற்கு பெரிய அளவில் வேலையில்லை.

மொத்தத்தில் பலவீனமான திரைக்கதை, அழுத்தமில்லாத காட்சிகள், ஆழமில்லாத கதாபாத்திரங்கள், பிற்போக்குத்தனமான பழைய ஃபார்மெட்டில் வந்துள்ள பூமர் சினிமா.