Saturday, November 2
Shadow

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு.

 

சந்தீப் கிஷன் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘மைக்கேல்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ நீ போதும் எனக்கு..’ எனத் தொடங்கும் முதல் பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

 

 

 

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்’. இதில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதாமணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல் எல் பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. ‘நீ போதும் எனக்கு..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.

 

இந்த பாடலின் காணொளியில் நாயகன் சந்தீப் கிஷனும், நாயகி திவ்யான்ஷா கௌஷிக்கும் சந்தித்துக் கொள்கிறார்கள். திவ்யான்ஷா கௌஷிக் தனது வீட்டின் நுழைவாயிலை திறந்து சந்தீப் கிஷனுக்கு காதலிப்பதற்கான அறிகுறிகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து பாடல் தொடங்குகிறது. காதலியிடம் அத்துமீறலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் சந்தீப்பிடம்.. வாய்மொழியாக அழைப்பு விடுக்க, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இவர்கள் இருவரின் காதல் ரசாயன கலவை.. ரசிகர்களை கண்ணிமைக்க மறந்து, ரசிக்க வைக்கிறது. இந்த பாடலில் இடம்பெறும் உதடுடன் உதடு பொருத்தி கொடுக்கும் முத்தக்காட்சியில்.. இசையும், பாடகரின் குரலும், கலைஞர்களின் காதலுடன் கூடிய நடிப்பும்… ஒரே புள்ளியில் சந்தித்து மாயாஜால நடனமாட.. பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது.

 

இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.