ஓ மை கோஸ்ட் (OMG)- விமர்சனம்
இயக்குனர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தா, யோகிபாபு, அர்ஜுனன், தங்கதுரை உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் ஓ மை கோஸ்ட் (OMG) திரைப்படம். இப்படத்தில் சன்னி லியோன் நடித்திருப்பதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பூர்த்தி செய்திருக்கிறார்கள் என்று படத்தின் விமர்சனத்தில் பார்த்து விடலாம்.
கதைப்படி,
நண்பர்களாக வருகின்றனர் சதீஷும் ரமேஷ் திலக்கும். பட இயக்குனருக்கு வாய்ப்பு தேடி அலைகிறார் சதீஷ். சதீஷின் காதலி தான் தர்ஷா குப்தா.
தர்ஷாவிற்கு அடிக்கடி கனவில் ஒரு அமானுஷ்யம் ஒன்று வந்துவந்து செல்கிறது. இச்சூழலில், அந்த அமானுஷ்யம் யார் என்று கண்டறிய பாலாவிடம் செல்கிறார் தர்ஷா.
அது பல வருடங்களுக்கு முன் அணகொண்டபுரம் என்ற ராஜ்யத்தை கட்டி ஆண்ட ராணி மாயசேனாவின்(சன்னி லியோன்) ஆவி என்று கண்டுபிடிக்கிறார்.
அந்த ஆவி தர்ஷாவின் உடலுக்கு புகுந்துவிட, தன்னை அந்த அரண்மனைக்கு கூட்டிச் செல்லும்படி சதீஷையும் ரமேஷ் திலக்கையும் மிரட்டுகிறார்.
மிரண்டு போன இருவரும் தர்ஷாவை அந்த பாழடைந்த அரண்மனைக்கு கூட்டிச் செல்கின்றனர்.
அங்கு மந்திரவாதியாக வரும் மொட்டை ராஜேந்திரன், ராணி மாயசேனாவின் வரலாறை கூற ஆரம்பிக்கிறார்.
அப்படி அந்த வரலாறில் என்ன நடந்தது.? அரண்மனைக்குள் சென்ற சதீஷ் மீண்டு வந்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் இரண்டாம் பாதியில் மட்டுமே சன்னி லியோன் வருவதால், அவரை ஆவலோடு காணச் செல்லும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்படுவது உறுதி தான். அவர் இருக்கும் காட்சிகள் பெரும்பான்மையாக இல்லாததால், படத்தின் மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது.
வழக்கம் போல் இந்த படத்திலும் சதீஷ் பேசிக் கொண்டே இருப்பதால், ஒரு கட்டத்திற்கு மேல், “கொஞ்ச நேரம் நீ பேசாம இருப்பா” என படம் பார்ப்பவர்களை கூற வைத்து விடுகிறார். ரமேஷ் திலக், ஆங்காங்கே அடிக்கும் கவுண்டர்கள் சற்று ஆறுதல்.
தர்ஷா குப்தாவின் காட்சிகளும் சற்று குறைவு தான். என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனது திறமையை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
யோகிபாபுவின் காமெடி காட்சிகள் படத்தின் ஒரு இடத்தில் கூட சிரிப்பை கொண்டு வராமல் போனது ஏமாற்றம் தான்.
வந்த ஒரு சில காட்சிகளில் ரசிகர்களுக்கு சற்று கிலுகிலுப்பை கொடுத்துவிட்டுச் சென்றாலும், ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக கொடுக்காமல் சென்று விட்டார் சன்னி லியோன்.
இரண்டாம் பாதியில் படத்தின் வசனத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். மன்னர் கால ஆட்சியில் சல்மான் கான், ஷாருக்கான் என்றெல்லாம் வசனம் வந்து கொண்டிருக்கிறது.
படத்தின் கதையில் இயக்குனர் யுவன் இன்னும் கூடுதலாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். சிஜி பணிகளிலும் சற்று அதிகமாகவே கவனம் கொண்டிருந்திருக்கலாம்.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கிடைத்த சற்று ஆறுதல்..
ஓ மை கோஸ்ட் – சிக்கன் பிரியாணின்னு நினைச்சு போறவங்களுக்கு குஸ்கா மட்டுமே கிடைக்கும்…