Sunday, October 13
Shadow

இன்னர் வீல் சார்பாக மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன்

அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஆன்லைனில் கல்வி கற்பதற்காக இன்னர் வீல் கிளப் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன் இலவசமாக வழங்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பிப்ரவரி மாத இறுதியிலிருந்து தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் அரசு சார்பில் ஆன்லைனிலும், தொலைக்காட்சி வழியாகவும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்வியை கற்பதற்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதனை உணர்ந்த இன்னர் வீல் கிளப் டிஸ்ட்ரிக்ட் 323 ((INNER WHEEL DISTRICT 323 )தலைவர் USHA SARAOGI மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் வழங்க தீர்மானித்தார்கள்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் ரோட்டில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்(Chennai girls hr. sec. school ,Saidapet-63 Smart phones )உள்ள மாணவிகளுக்கும், சென்னை திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில்(chennai Higher sec.School,thiruvanmiyur-72 Smart phones) உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், 9.5 லட்சம் ரூபாய் செலவிலான 135 ஸ்மார்ட்போன்களை வாங்கி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

இது தொடர்பான விழா சென்னை சைதாப்பேட்டை மேற்கு ரோட்டில் உள்ள சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான திருமதி பத்மஜா ராவ் தலைமையில், இன்னர் வீல் கிளப் டிஸ்ட்ரிக்ட் 323 தலைவரான உஷா சரோஜி அவர்களும், அவர்களுடன் இன்னர் வீல் கிளப் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கி தலைவர் உஷா சரோஜி பேசுகையில்,’ பெண்கள் கல்வி கற்றால் மூன்று குடும்பங்களுக்கு அது பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும். பெண்கள் கல்வி கற்பது, எதிர்காலத்தில் அந்த பெண்ணிற்கும், அந்தப் பெண்ணின் பிறந்த குடும்பத்திற்கும், திருமணமாகி அந்தப்பெண் செல்லும் புகுந்த வீட்டிற்கும் என மூன்று குடும்பங்களுக்கும் உதவி புரியும். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கல்வி என்பது தவிர்க்க முடியாததாக இருப்பதாலும், அவை புதிய பாணியிலான கல்விகற்றலாக இருப்பதாலும், இதற்கு அத்தியாவசியமான ஸ்மார்ட்போன்களை இலவசமாக மாணவிகளுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. இதற்காக இன்னர் வீல் கிளப் சார்பில் ‘ஞானம் திட்டம்’ என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டு, அதனடிப்படையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேவைப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்த துல்லியமான தரவுகளை, தொடர் தேடல்களின் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு இன்னர் வீல் கிளப் சார்பாக உதவி செய்து வருகிறோம். பெண்களின் முன்னேற்றத்திற்கும், பெண்களின் மேம்பாட்டிற்கும், இன்னர் வீல் கிளப் தொடர்ந்து பாடுபடும்.’ என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள், ஆசிரியர்கள், இன்னர் வீல் கிளப்பின் உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் நிகழ்வு, ஜும் செயலியின் மூலம் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது.

இன்னர் வீல் கிளப்பின் ஏனைய திட்டப்பணிகள்

இன்னர் வீல் டிஸ்ட்ரிக் 323 சார்பாக ஆவடிக்கு அருகிலுள்ள 108 ஏக்கர் பரப்பளவில் உள்ள கைவிடப்பட்ட ஏரியை தத்து எடுத்துக்கொண்டு அதனை முழுவதுமாக தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் போதிய அளவு நீர் வசதி கிடைக்கிறது. இந்த ஏரியின் மையப்பகுதியில் சிறிய காடு ஒன்றினையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

45 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். 105 க்கும் மேற்பட்ட மழைநீர் சேகரிப்பு கிணற்றையும் ஏற்படுத்தி நிலத்தடி நீர் சேமிப்பிற்கு உதவி செய்திருக்கிறோம். இதன் மூலம் பள்ளிகளை பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் மூழ்காமல் இருப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.

இன்னர் வீல் கிளப் 323 சார்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சிறிய வகையிலான காடுகளை உருவாக்கும் திட்டத்திற்காக மரங்களையும், செடிகளையும், மரக்கன்றுகளையும் பதியமிட்டு வருகிறோம்.

ஏழை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்படும் வகையில் ‘நிமிர்ந்து நில்’ என்ற திட்டத்தை ஏற்படுத்தி, ஒரு லட்சம் சானிட்டரி நாப்கின்களை பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும், புலம்பெயர் பெண்களுக்கும், அனாதை ஆசிரமங்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான காப்பகங்களில் இருக்கும் பெண்களுக்கும் வழங்கியிருக்கிறோம்.

இதனுடன் ‘பாவை’ என்ற பெயரிலான சுகாதாரத்தை மையப்படுத்திய விழிப்புணர்வு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு ரூபெல்லா விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம்.

இன்னர் வீல் கிளப் உலகம் முழுவதும் 99 நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள உறுப்பினர்கள் இணைந்து இந்த சமுதாய மேம்பாட்டிற்கு உதவி செய்து வருகிறார்கள். இன்னர் வீல் கிளப் முழுவதும் பெண்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் ஆரோக்கியத்திற்காகவும் அவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காகவும் அயராது பாடுபட்டு வருகிறது.