‘அகிலன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
ஜெயம் ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கியவர், என். கல்யாண கிருஷ்ணன். ஜெயம் ரவியை முதன்முறையாக வட சென்னை ஆளாக தனது படத்தில் காட்டியிருப்பார். அதே இயக்குநருடன் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் கை கோர்த்துள்ளார், ஜெயம் ரவி. இப்படத்தில் கரடுமுரடான துறைமுக தொழிலாளியாக வந்து, கடல் வழியில் நடக்கும் மாஃபியாவில் முக்கிய பங்காற்றுகிறார் அகிலன்(ஜெயம் ரவி).
இந்தியாவின் கடல் வழி கள்ளக்கடத்தலுக்கு தலைவனாக விளங்குகிறார், கபூர். அவன் ஆணையிடும் பொருட்களை தனது ஆட்களை வைத்து கடல் வழியாக கடத்தும் பெரிய தாதா ஹரிஷ் பேரடி. இவரிடம் திறமையான கடத்தல்காரன் எனப் பெயரெடுப்பவர்தான் நம்ம ஹீரோ அகிலன்(ஜெயம் ரவி). இவருக்கு உதவும் காவல் அதிகாரியாகவும் காதலியாகவும் வருகிறார், பிரியா பவானி சங்கர்.
அகிலனை பிடித்து ஜெயிலில் தள்ளியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் டெல்லி இன்டலிஜன்ஸ் படையை சேர்ந்த போலீஸாக வருகிறார் கோகுல்(சிரக் ஜானி) அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு முடிக்கவேண்டிய வேலைகளை கனகச்சிதமாக முடிக்கிறார், ஜெயம்ரவி.
கடல் வழி கடத்தல்களில் ஈடுபடும் ‘ரக்கட்’ நாயகனாக படத்தின் ஆரம்பத்திலேயே பதிந்து விடுகிறார், ஜெயம்ரவி. படம் தொடங்கிய ஓரிரு இடங்களிலேயே வேகமெடுக்கும் திரைக்கதைக்கு ஆங்காங்கே ‘ஸ்பீட் ப்ரேக்கர்’ போல சில தொய்வுகள் ஏற்பட்டாலும் அடுத்தடு எடுத்த வேகத்தில் நிற்காமல் பயணம் செய்கிறது திரைக்கதை. கடலில் நடைபெறும் கள்ளக்கடத்தலை காண்பித்த விதத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.
அகிலன் படம் பார்ப்பவர்கள் ஒரு இடத்தில் கூட, அங்கு இங்கு கண்ணை அசைக்கவோ, கொட்டாவியோ விடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவிற்கு படத்தை போர் அடிக்காமல் சொல்லியிருக்கிறார், இயக்குநர், கல்யாண கிருஷ்ணன். கதைக்கு ஏற்றவாறு, சாம் சி.எஸ்சின் இசையும் ஈடு கொடுத்து பயணித்துள்ளது. படத்தில், ஒரு இடத்தில் கூட காமெடி இல்லை, ஆனாலும் அது பெரிய குறையாக தெரியவில்லை. பக்கா ஆக்ஷன்-கமர்ஷியல் படத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவையனைத்தும் இப்படத்தில் இருக்கிறது.