Saturday, April 13
Shadow

‘செங்களம்’ வெப் சீரிஸ் ரேட்டிங்: 3/5

படம்: செங்களம் (வெப் சீரிஸ்)

நடிப்பு: கலையரசன், வாணி போஜன், ஷாலி, சரத் லோஹிஸ்தவா, விஜி சந்திரசேகர், மானசா, வேல ராமூர்த்தி, பக்ஸ், டேனியல், அஞ்சலி, பவன், பிரேம், கஜராஜ், பூஜா

தயாரிப்பு: அபினேஷ் இளங்கோவன்

இசை: தரன்

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

இயக்கம்: எஸ்.ஆர்.பிரபாகரன்

ரிலீஸ்: ஜீ5 ஒ டி டி

பி ஆர் ஓ: சதீஷ், சிவா (AIM)

நிகழ்கால அரசியலை புனைப் பெயர்கள் வைத்து சொல்லப்பட்டிருக்கும் அரசியல் சதுரங்க கதை.

‘செங்களம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப, குருதியும் கிரைமும் கலந்த புனைவு அரசியல் த்ரில்லர், ஒன்பது எபிசோடுகள் கொண்ட இணையத் தொடராக (வெப் சீரீஸாக) ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த 30 ஆண்டுகால அதிமுக – திமுக அரசியலை, அக்கட்சிகளின் அரசியல் தலைவர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகளை ஆங்காங்கே நினைவூட்டும் வகையில் கதையையும், காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் அமைத்து, அதேநேரத்தில் வம்பு – வழக்கில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக நிறைய கற்பனையைக் கலந்து சுவாரஸ்யமாக மாற்றி, சர்ச்சைக்குரிய தொடராக பாராட்டும் வகையில் ‘செங்களம்’ தொடரை படைத்தளித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

மாநில அளவிலான அரசியலை மாவட்ட அரசியல் புனைவாக மாற்றி, சமகாலத்தில் நடப்பதை ‘இன்று’ என்றும், கடந்த காலத்தில் நடந்ததை ‘அன்று ஒரு நாள்’ என்றும் குறிப்பிட்டு, இரண்டு ட்ராக்குகளில் கதை சொல்லும் உத்தியை ஒன்பது எபிசோடுகளிலும் பயன்படுத்தி, தொடரின் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளார் இயக்குனர்.

கதையின் மேலோட்டமான ஸ்கெட்ச் என்னவென்றால், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் ராயர் (கலையரசன்). அவன் தன் இரண்டு தம்பிகளின் துணையுடன் மூன்று கொலைகளைச் செய்துவிட்டு, தம்பிகளுடன் காட்டில் தலைமறைவாக இருக்கிறான். இவர்களைப் பிடிக்க காவல்துறை பகீரத முயற்சிகளைச் செய்து வருகிறது. காவல்துறையிடம் சிக்காமல் ஒளிந்திருக்கும் ராயர் சகோதரர்கள், இன்னும் இரண்டு கொலைகள் செய்ய வேண்டியிருப்பதாக சவால் விடுகிறார்கள். இந்த ராயர் சகோதரர்கள் யார்? அவர்கள் யாரையெல்லாம் கொலை செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? இன்னும் யாரையெல்லாம் ஏன் கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கான விடைகளுடன் விரிவடைகிறது ‘செங்களம்’ கதையின் மேலோட்டமான ஸ்கெட்ச்.

இந்த மேலோட்டமான ஸ்கெட்சுக்குள் தான் இருக்கிறது, நிஜத்தை ஆங்காங்கே நினைவூட்டும் புனைவு அரசியல் த்ரில்லர். அது என்னவென்றால், விருதுநகரில் ஒரு பாரம்பரியமிக்க அரசியல் செல்வாக்குள்ள குடும்பம். விருதுநகர் நகராட்சித் தலைவர் பதவியை தலைமுறை தலைமுறையாக தக்க வைத்திருக்கும் அக்குடும்பத்தின் இப்போதைய தலைவர் சிவஞானம் (சரத் லோகிதாஷ்வா). அந்திமக் காலத்தில் இருக்கும் அவர், தானாக நடமாட இயலாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்துதான் இடம்பெயர முடியும் என்ற நிலையில் இருப்பவர். அவரது மூத்த மகன் ராஜமாணிக்கம் (பவன்) தான் இப்போது நகராட்சித் தலைவராக இருக்கிறார்.

நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம், தன் மனைவி இறந்த பிறகு திருமணமே செய்துகொள்ளாமல் பல ஆண்டுகளாக தனியாளாக இருந்தவர், பணக்கார தொழிலதிபரின் இளமை ததும்பும் மகளான சூர்யகலாவை (வாணி போஜன்) இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொள்கிறார். இவர்கள் கொடைக்கானலுக்கு தேனிலவு செல்கையில், லாரி மோதி விபத்து ஏற்படுகிறது. இதில், ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழக்கிறார், சூர்யகலா காயங்களுடன் தப்பிப் பிழைக்கிறார்.

இது விபத்தல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று நம்பும் பெரியவர் சிவஞானம், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அத்துடன், அடுத்த நகராட்சித் தலைவராக தனது ரத்த உறவினன் – அதாவது தனது இரண்டாவது மகன் நடேசன் (பிரேம்) – தான் வர வேண்டும் என்றும் விரும்புகிறார். ஆனால், அவரது மருமகளான சூர்யாகலா, தனது தோழியும் “உடன்பிறவா சகோதரி”யுமான நாச்சியார் (ஷாலி) துணையுடன், தனது மாமனாரின் விருப்பத்தில் எப்படி மண் அள்ளிப்போட்டு, நகராட்சித் தலைவர் ஆகிறார்? அதன்பின், சூர்யகலாவை அழித்து, ‘உடன்பிறவா சகோதரி’யான நாச்சியார் எப்படி நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுகிறார்? என்பது மீதிக்கதை.

நகராட்சித் தலைவரை மணந்து, அவரது மறைவுக்குப்பின் ‘உடன்பிறவா சகோதரி’யின் துணையுடன் சூழ்ச்சிகள் செய்து, நகராட்சித் தலைவர் பதவியில் அமரும் சூர்யகலா கதாபாத்திரத்தில் வரும் வாணி போஜன் அமர்க்களமாக நடித்திருக்கிறார். அவரது தோழியும் ‘உடன்பிறவா சகோதரி’யுமான நாச்சியார் கதாபாத்திரத்தில் வரும் ஷாலி, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஆடும் அரசியல் சதுரங்கம் அட்டகாசம்.

சக்கர நாற்காலியில் அமர்ந்துவிட்ட மூத்த அரசியல்வாதி சிவஞானமாக வரும் சரத் லோகிதாஷ்வா, இறுக்கமான முகத்துடன் சதா சிந்தித்துக் கொண்டிருப்பவராகவும், குடும்பப் பாசத்துடன், தனது ரத்த உறவினன் தான் தனது அரசியல் வாரிசாக வர வேண்டும் என்பதற்காக குழம்பிக் குழம்பி முடிவெடுப்பவராகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார். தனது விருப்பத்துக்கு மாறாக மருமகள் நகராட்சித் தலைவராகி விட்டார் என்பதை அறிந்தவுடன் கண் இமைக்காமல் அவர் பார்க்கும் பார்வை அசத்தல்.

கொலைகள் செய்துவிட்டு, தம்பிகளுடன் தலைமறைவாக இருக்கும் ராயர் கதாபாத்திரத்தில் வரும் கலையரசன் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். வாணி போஜன் மீது அவர் கொண்ட மென்மையான காதல், அது தரும் உணர்வு, வலி ஆகியவற்றை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

ராயர் சகோதரர்கள் மற்றும் நாச்சியார் ஆகியோரின் அம்மா வேலாயியாக வரும் விஜி சந்திர சேகர், சிவஞானத்தின் மூத்த மகன் ராஜரத்தினமாக வரும் பவன், இரண்டாவது மகன் நடேசனாக வரும் பிரேம், எம்.எல்.ஏ கணேசமூர்த்தியாக வரும் வேல ராமமூர்த்தி, எம்.எல்.ஏ.வின் பி.ஏ.வாக வரும் பக்ஸ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக்கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நிஜ சம்பவங்களையும், நிஜ மாந்தர்களையும் நினைவூட்டும் வகையில் ஒரு முழுநீள அரசியல் த்ரில்லரை, பல சுவாரஸ்யமான கற்பனைத் திருப்பங்களுடன், போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பாராட்டுக்குரியவர். சர்ச்சைக்குரிய விஷயங்களை லாவகமாக கதையாக்கும் சாமர்த்தியம் உள்ள இந்த இயக்குனர் இதுபோல் இன்னும் பல அரசியல் த்ரில்லர்களை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

வெற்றி மகேந்திரனின் ஒளிப்பதிவும், தரணின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம்.