‘தீர்க்கதரிசி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
தயாரிப்பு : ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ்
நடிகர்கள் : சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீமன் மற்றும் பலர்.
இயக்கம் : பி. ஜி. மோகன் – எல். ஆர். சுந்தரபாண்டி
காவல்துறையின் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார் ஸ்ரீமன். இவர்களுக்கு ஒரு போன் வருகிறது. அதில் பேசும் நபர், இன்னும் சற்று நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் ஒரு பெண் இறக்கப் போகிறார். அவரை ஒருவர் கொலை செய்யப்போகிறார் என்று கூறி போனை கட் செய்து விடுகிறார்.
காவல்துறைக்கு வரும் வழக்கமான ஃபேக் போன் தான் என்று கவனக்குறைவாக விட்டு விடுகின்றனர் ஸ்ரீமன் குழுவினர். ஆனால், மறுநாள் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். .இதனால் அதிர்ச்சியடையும் ஸ்ரீமன், இத்தகவலை போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கிறார்.
இந்நிகழ்வு முடிவதற்குள் அடுத்த போனும் வர, அடுத்த ஒரு சம்பவமும் அரங்கேறுகிறது. இதனால், உடனடியாக போலீஸ் உயரதிகாரியால், சிறப்பு படை ஒன்று அஜ்மல் தலைமையில் அமைக்கப்படுகிறது.
அஜ்மல் தலைமையிலான போலீஸ் படை, அந்த மர்ம நபரை தேடும் படலத்தில் இறங்கிறது.
போன் செய்து நடப்பதை முன்கூட்டியே கூறும் அந்த தீர்க்கதரிசி யார்.? இந்த கொலைகளை யார் செய்கிறார்.?? எதற்காக இந்த கொலைகள் நடக்கிறது.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக அஜ்மல், படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஆறடி உயர ஜாம்பவனாக போலீஸ் உடையில் மிடுக்கென ரெளடிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் அசர வைத்திருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும் என்று தேடுதலோடும், அடுத்து என்ன என்ற ஆவலோடும் கதை நகர்ந்து கொண்டே இருப்பதால், எதற்காக இதெல்லாம் நடக்கிறது என்ற ஆர்வம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்க, கதையை வேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்..
வயதானவர்கள் என்றுகூட பார்க்காமல் இவர்களை கொல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்ற தேடுதல் க்ளைமாக்ஸ் வரையிலும் கொண்டு சென்று இயக்குனரின் தனி சாமர்த்தியம்.
அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட விளக்கமானது, சில வருடங்களுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை இயக்குனர் தனது கண்ணோட்டத்தில் கூறியிருக்கிறார்.
அஜ்மல் கதாபாத்திரத்திற்கும் கடைசியாக வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சியும் யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான்.
ஒரு முக்கியமான பலமான காட்சியில் நடித்திருந்த சத்யராஜ்க்கு பெரிய பாராட்டுகள். ஒரு பெரும் நடிகரால் மட்டுமே அக்கதாபாத்திரத்திற்கான வலு அதிகமானதாக இருக்கும், அதை சத்யராஜ் மிக தெளிவாக செய்து கொடுத்திருக்கிறார்.
ஆங்காங்கே ஒரு சில லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்த்தாலும் கதையின் ஓட்டம் ஒரே நேர்க்கோட்டில் பயணித்திருப்பது பலம்.. படத்தின் ஓட்டத்தில் வேகத்தடையாக வந்த போலீஸ் பாடலை தவிர்த்திருந்திருக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட சமூக வாடை படம் முழுவதும் வீசியதை சற்று தவிர்த்திருக்கலாம்.. கதைக்கு தேவையில்லாத காட்சியாக அது வந்து செல்வதால், தேவையில்லாத ஒன்றாக தெரிந்தது.
பாலசுப்ரமணியனின் இசையில் பின்னணி இசை கதை ஓட்டம் பிடிக்க கைகொடுத்திருக்கிறது. லக்ஷ்மணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருந்தது.
கண்டெய்னர் சண்டைக் காட்சியில், துப்பாக்கி முனையில் நேருக்கு நேர் சென்று சண்டை செய்தது, இதெல்லாம் நோட் பண்ண மாட்டீங்களாப்பா அசிஸ்டண்ட்ஸ்…
எது எதுவாயினும் எடுக்கப்பட்ட நோக்கம் ஒன்றை நோக்கி நகர்ந்ததால், அதற்காக படக்குழுவினரை பெரிதாகவே பாராட்டலாம்.