Thursday, June 1
Shadow

‘குட் நைட்’ – Good Night திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Casting : Manikandan, Meetha Raghunath, Ramesh Thilak, Balaji Shakthivel, Uma Ramachandran, Raichal Rebacca, Bucks, Shree Aarthi

Directed By : Vinayak Chandrasekaran

Music By : Sean Roldan

Produced By : Nazerath Pasilian, Magesh Raj Pasilian, Yuvaraj Ganesan

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதனால், அவரது அலுவலகம் முதல் அக்கம் பக்கத்தினர் வரை அனைவரிடத்திலும் கேலி கிண்டலுக்கு ஆளாகி அவமானப்படுகிறார். இந்த குறட்டை பிரச்சனையால் காதலையும் இழந்து மன வருத்தத்தில் இருக்கும் மணிகண்டனின் வாழ்க்கையில் நாயகி மீதா ரகுநாத் வருகிறார். இருவரும் காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கும் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை கல்யாண வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் சிறு சிறு மோதல்கள் ஒரு கட்டத்தில், கணவன் – மனைவி பிரிய வேண்டிய சூழலை உருவாக்க, அவர்களது இல்லற வாழ்க்கை தொடர்ந்ததா? அல்லது முறிந்ததா? என்பதை நகைச்சுவையாக மட்டும் இன்றி நம் வாழ்க்கையோடு இணைத்து பார்க்கும் விதத்தில் மனதுக்கு நெருக்கமாக சொல்வதே ‘குட் நைட்’.

நாயகனாக நடித்திருக்கும் மணிகண்டன் ஒவ்வொரு காட்சியிலும் மிக இயல்பாக நடித்து காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பல இடங்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் மணிகண்டன், அலுவலகம் மற்றும் குடும்ப நபர்களிடம் குறட்டையால் அவமானப்பட்டு கலங்கும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டுகிறார். சோகம், மகிழ்ச்சி, காதல், மோதல் என அனைத்து உணர்வுகளையும் மிக சாதாரணமாக வெளிக்காட்டும் மணிகண்டன், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் மோகன் என்ற நடுத்தர குடும்ப இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்த ஒரு பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் அதிகம் பேசவில்லை என்றாலும் அவரது அமைதியான கண்கள் பல விஷயங்களை பேசுகிறது.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக், மணிகண்டனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். படம் முழுவதும் ஜாலியாக நடித்திருப்பவர் தனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சியில் கலங்க வைத்திருக்கிறார்.தாத்தா வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பாட்டியாக நடித்திருக்கும் கவுசல்யா நடராஜன், ரமேஷ் திலக்கின் மனைவியாக நடித்திருக்கும் ரைச்சேல் ரெபாகா, ஐடி நிறுவனத்தின் மேலாளராக நடித்திருக்கும் பக்ஸ், மணிகண்டனின் அம்மாவாக நடித்திருக்கும் உமா ராமச்சந்திரன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள் நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். நாயகியின் வீடு, நாயகனின் வீடு மற்றும் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடு என்று மூன்று வீடுகள் கதைக்களத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வருவதோடு, மூன்று வீடுகளையும் கதாப்பாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்.

ஷீன் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் சேர்ந்து பயணித்திருக்கிறது. இரண்டையும் கதையில் இருந்து பிரித்து பார்க்க முடியாதபடி பணியாற்றியிருக்கும் இசையமைப்பாளர் ஷீன் ரோல்டன் பங்கு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், நடிகர்களின் சிறு சிறு எக்ஸ்பிரஷன்களை கூட ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் காட்சிகளை மிக நுணுக்கமாக தொகுத்திருக்கிறார். குறிப்பாக மணிகண்டன், ரமேஷ் திலக் ஆகியோரது சிறு சிறு வார்த்தைகளுக்கு கூட சட்டென்று சிரிக்கும்படி காட்சிகளை கையாண்டிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.குறட்டையை மையமாக வைத்துக்கொண்டு குடும்பமாக பார்த்து மகிழும்படியான ஒரு சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.நாயகன், நாயகிக்கு மட்டும் இன்றி படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்து அனைவரிடத்திலும் சிறப்பான வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், நாய் குட்டியை கூட சுட்டித்தனமாக நடிக்க வைத்து கைதட்டல் பெறுகிறார்.

மிக சாதாரணமான காட்சியாக இருந்தாலும் அதனை படம் பார்ப்பவர்கள் ரசித்து சிரித்து கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட விதமும், காதல், சோகம், மகிழ்ச்சி, கோபம், மோதல் என அனைத்து விஷயங்களையும் இயல்பாகவும், அளவாகவும் கையாண்டிருப்பது படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.ஆரம்பம் முதல் முடிவு வரை படம் பார்ப்பவர்களையும் கதையோடு பயணிக்க வைப்பது போல் வடிவமைக்கப்பட்ட காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் நடிகர்கள், அந்த அந்த கதாபாத்திரமாகவே நம் கண்களுக்குள் இறங்கி மனதுக்கு நெருக்கமாகி விடுவது படத்தின் மற்றொரு சிறப்பு.