‘சிறுவன் சாமுவேல்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Ajidhan Thavasimuthu, K.G. Vishnu, S. Chellappan, S.B. Aparna, M.A. Mersin, J. Jenish
Directed By : Sadhu Burlington D
Music By : S. Sam Edwin Manohar & J. Stanley John
Produced By : Countryside films
சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நெருக்கமான நண்பர்கள். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, பேட் வாங்க வசதியில்லாததால் தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகிறார்கள். ஆனால், சிறுவன் சாமுவேல் எப்படியாவது நல்ல பேட் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், குடும்ப சூழலால் அவனது பெற்றோரால் அவனுக்கு பேட் வாங்கி கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் கிரிக்கெட் பேட் மீது தீராத ஆசையை வளர்த்துக் கொள்ளும் சாமுவேல், பேட் வாங்குவதற்கான முயற்சியில் இறங்குகிறான். அதனால் அவனது நெருங்கிய நண்பன் ராஜேஷு மீது திருட்டு பழி விழுகிறது.
எந்தவித தவறும் செய்யாத அப்பாவியான ராஜேஷ் மீது விழுந்த திருட்டு பழிக்கு காரணமாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிரிக்கெட் பேட் வாங்கும் தனது ஆசைக்காக திசை மாறும் சிறுவன் சாமுவேல், கிரிக்கெட் பேட் வாங்கினானா அல்லது தனது தவறை உணர்ந்தானா, என்பதை சிறுவர்களின் வாழ்வியல் படைப்பாக நம் இதயத்துக்கு நெருக்கமாக சொல்வதே ‘சிறுவன் சாமுவேல்’.சாமுவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் அஜிதன் தவசிமுத்து, அதிகம் பேசவில்லை என்றாலும் தனது கண்களினாலேயே தனது உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகிறார். நண்பன் ராஜேஷை பார்க்காமல் ஏங்கும் அவரது கண்கள் மீது இரக்கம் வரும் அதே நேரத்தில், தவறு செய்யாத ராஜேஷ் தண்டிக்கப்படும் காட்சிகளில் சாமுவேல் மீது கோபமும் வருகிறது. நல்லது எது, கெட்டது எது என்று அறியாத வயதில், சிறுவர்களுக்கு வரும் அனைத்து ஆசைகளையும், அதை அடைவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் மூளைக்கு கொண்டு செல்கிறான் அஜிதன் தவசிமுத்து.
சாமுவேலின் நண்பன் ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு, அப்பாவியான முகம், வித்தியாசமான பார்வை என்று பார்த்தவுடன் ஈர்த்து விடுபவர், எந்தவித பயமும் இன்றி அனைத்துவிதமான உணர்வுகளையும் அசால்டாக வெளிப்படுத்தியிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் போதும் சரி, தன் மீது திருட்டு பழி சுமத்தி தண்டிக்கும் போதும் சரி, அனைத்து காட்சிகளிலும் இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்.மற்ற வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள், பெற்றோர்கள் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள், டியூசன் டீச்சராக நடித்திருக்கும் பெண் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் மட்டும் இன்றி மண்ணின் மனிதர்களாகவே இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் வி.சிவானந்த் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு எளிமையான கிராமத்தை அதன் எளிமையையும், அசல் தன்மையையும் மாற்றாமல் காட்டியிருப்பது படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை தரும். கதைக்களத்தில் இருக்கும் எளிமையை, நடிகர்கள் தங்களின் நடிப்பு மூலம் வெளிப்படுத்துவதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தி, வழக்கமான சினிமாவுக்கான பாதையை தவிர்த்து பயணித்திருக்கிறார்.எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே..ஸ்டாண்ட்லி ஜான் ஆகியோரது இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை தனது இசை மூலமாக பிரதிபலித்திருக்கும் இவர்களது பணியும் கவனம் பெறுகிறது.குழந்தைகளுக்கான படம் என்ற பெயரில் அவர்களை பெரிய மனிதர்களாக காட்டி கடுப்பேற்றும் திரைப்படங்களுக்கு மத்தியில், முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படமாகவும், அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் எதார்த்தமான படைப்பாகவும் இந்த இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாது ஃபெர்லிங்டன்.
சிறுவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக இருந்தாலும், கதைக்களம் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைத்திலும் இயல்பு தன்மை மாராமல் திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் நாகர்கோவில் வட்டார தமிழை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பது படத்தின் ஹைலைட்.படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அத்தனை பேரும் புதியவர்களாக மட்டும் இன்றி, அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களாக இருப்பதும், சினிமாவுக்கான முகங்களாக அல்லாமல் இருப்பதும் இப்படத்தின் மற்றொரு சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்படி படம் முழுவதும் பல சிறப்புகளை கொண்ட இந்த படம் ஏற்கனவே பல விருதுகளை வென்றாலும், இன்னும் பல விருதுகளை வெல்வதோடு, ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.