‘பிச்சைக்காரன் 2’ திரைப்பட ரேட்டிங்: 4/5
நடிகர்கள்:விஜய் ஆண்டனி,காவ்யா தாப்பார்
இயக்கம்: விஜய் ஆண்டனி
சினிமா வகை:Action, Thriller, Drama
கால அளவு:2 Hrs 10 Min
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். தாயை காப்பாற்ற பணக்கார மகன் பிச்சைக்காரனாக மாறிய கதையை படமாக்கி ரசிகர்களை கவர்ந்தார் சசி. விஜய் ஆண்டனி இந்த கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். செண்டிமெண்ட், காமெடி, காதல், மாஸ் காட்சிகள் என அனைத்தும் அடங்கிய பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக இந்த படம் அமைந்து இருந்தது.
பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், தற்போது அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை சசிக்கு பதிலாக விஜய் ஆண்டனியே இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள இப்படத்தில் காவ்யா தப்பார் ஹீரோயினாக நடித்துள்ளார்.
உலகின் 7 ஆவது பணக்காரரான விஜய் குருமூர்த்தியின் ( விஜய் ஆண்டனி) கோடிக்கணக்கான சொத்துக்களை அவருடன் இருக்கும் கூட்டாளிகள் அபகரிக்க நினைக்கிறார்கள். அந்த வலையில் எதிர்பாராத விதமாக வந்து சிக்குகிறான் தங்கையைத்தேடி அலையும் சத்யா.
அவனின் மூளை இடம் மாற, ஒரே நாளில் பிச்சைக்காரன் சத்யா கோடீஸ்வரனாக மாறிப்போகிறான். ஆனால் அந்த மாற்றம் சத்யாவிற்குப் பிடிக்கவில்லை. தன்னை விட்டுவிடும்படி கதறுகிறான். ஆனால் அவன் தப்பிக்க வழியே இல்லாமல் அனைத்து கதவுகளும் மூடப்படுகிறது. அதன் பின்னர் சத்யா எடுத்த அவதாரம் என்ன? விஜய் குரு மூர்த்தியின் சொத்துக்கள் யாருக்குப் போய் சேர்ந்தது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை!
பிச்சைக்காரன் பாகம் 1 -ற்கும் பிச்சைக்காரன் பாகம் 2 -ற்கும் சம்பந்தமில்லை. இந்தப்படம் முற்றிலும் வேறொரு படமாக வந்திருக்கிறது. இயக்கம், நடிப்பு, இசை என படத்தை மொத்தமாக தாங்கி நிற்கிறார் விஜய் ஆண்டனி. மெனக்கெடலுக்கும், படைப்பு சுதந்திரத்தை தேடி அலைந்து, வாழ்க்கையை பணைய வைத்த அந்த தைரியத்திற்கும் முதலில் பாராட்டுகள்.
வழக்கம் போல படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் பெரிதான வித்தியாசம் இல்லை. ஆக்ஷன் காட்சிகளில் நடிகனாக ஒத்துக்கொள்ள வைத்த அவர், எமோஷன் சம்பந்தமான காட்சிகளில் இன்னும் திணறுவது தெளிவாக தெரிகிறது. கதாநாயகி காவ்யா தாப்பருக்கு பெரிதாக வேலை இல்லை. மன்சூர் அலிகான், ஒய்.ஜி. மகேந்திரன், ஜான் விஜய், ராதாரவி உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்து இருக்கின்றனர்.
படத்தின் கதையில் பெரிதான புதுமை இல்லை என்றாலும் திரைக்கதை என்கேஜிங்காக செல்வது படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது. முதல் பாதியில் விஜய், சத்யா யார்? அவர்கள் பின்னணி என்ன? உள்ளிட்டவற்றை பற்றி சொன்ன இயக்குநர் விஜய் ஆண்டனி, இரண்டாம் பாதியில் பணம் பற்றி சொன்ன பாடம் சிந்திக்க வைத்தாலும், சொன்ன விதம் சோர்வை தந்தது.
அந்த இடங்களை இன்னும் கொஞ்சம் நன்றாக கையாண்டு இருக்கலாம். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஓம் நாராயண்னின் ஒளிப்பதிவும், கிராஃபிக்ஸ் காட்சிகளும்தான். படத்தை கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி இருப்பது அவைகள்தான்.
குறிப்பாக துபாய் சம்பந்தமான காட்சிகளையும், விஜய் குரு மூர்த்தி சம்பந்தமான காட்சிகளையும் பிரமாண்டம் குறையாமல் நாராயண் காட்சிபடுத்திய விதம் சிறப்பு. அடுத்த ப்ளஸ் வசனங்கள். கே. பழனியில் பேனா முனையும் எழுதப்பட்ட அனைத்து வசனங்களுமே கவனிக்க வைத்தன. இசையைப் பொறுத்த வரை பாடல்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்க வில்லை. ஆனால் பின்னணி இசை கதையோடு ஒன்றி பெரும் பலம் சேர்த்து இருக்கிறது.
சத்யா, விஜய் என இரு கதாபாத்திரங்களையும் விஜய் ஆண்டனியே செய்திருப்பதும், அவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை உடன் இருக்கும் வில்லன்கள் தெரியாது போல் இருப்பது படத்தின் லாஜிக் ஓட்டை. பார்த்து பழகிய காட்சிகள் படத்தில் இருந்தாலும், மேக்கிங்கிற்காக பிச்சைக்காரன் -2 படத்தை ஒரு முறை பார்க்கலாம்.