‘பொம்மை’ திரைப்பட ரேட்டிங்: 2/5
கதைச் சுருக்கம்
இந்த படத்தின் கதையை விரிவாக சொன்னாலே சுருக்கமாக இருக்கும் .அந்த அளவிற்கு சுருக்கமான கதை. துணி கடைகளில் வைக்கும் பொம்மைகளை அழகு படுத்தும் இடத்தில் வேலை செய்யும் எஸ்.ஜே.சூர்யா,அவர் செய்யும் பொம்மையை சிறுவயதில் தொலைந்து போன தன் தோழியாக நினைத்து, அந்த பொம்மையை காதலித்து, அதனுடன் வாழ நினைக்கும் சைக்கோவாக, இறுதியில் என்ன வாகும் என்று படம் ஆரம்பித்தவுடன் நினைத்தது போலவே தற்கொலை செய்து கொண்டு படம் பார்ப்பவர்களை சைக்கோவாக மாற்றும் படம் தான் பொம்மை.
எஸ். ஜே. சூர்யாவிற்கு ஏன் இந்த வேலை பல நல்ல படங்களை எடுத்து,பல நல்ல படங்களில் நடித்து, சேர்த்த பணத்தை இப்படி வீண் விரயம் செய்திருக்கிறார். இந்த பொம்மையை வாங்கி எஸ் ஜே சூர்யாவிற்கு நடிப்பில் நவரசம் வரும் என்று நம்பி போனால் ஒரே வகையான ரசம் மட்டும் தான் தருகிறார் முறைத்து பார்க்கிறார், கத்தி பேசுகிறார் அவ்வளவுதான்.
ராதா மோகன் படம் என்று நம்பி போனால் இது இவர் படமா என்று என்ன தோன்றுகிறது. பொதுவாக ராதா மோகன் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விஷயங்களை அவ்வளவு அழகாக பேசும்.
இதற்கு முந்தைய படங்களில் எம் .எஸ். பாஸ்கர், விவேக் இன்னும் பலருடைய நடிப்புகளை முக்கியமாக குமரவேல் போன்றவரின் நடிப்புகளை ஏதாவது ஒரு சீனில் நம் மனதை பிழிய வைத்து விடுவார். ஆனால் இந்த படத்தில் எஸ் .ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர தவிர மற்றவர்கள் வருகிறார்கள் போகிறார்கள். நண்பன் என்ற ஒரு கேரக்டர் அது ஏன் வருகிறது என்று தெரியவில்லை. போலீஸ்காரர்களாக வருபவர்கள் ஏன் வருகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒருவர் வருகிறார் எஸ் .ஜே .சூர்யாவிடம் அடிவாங்கி சாகிறார் இப்படித்தான் இந்த படத்தின் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் ராதா மோகன்.
பிரியா பவானி சங்கர் வருகிறார் போகிறார் எஸ்.ஜே சூர்யாவை பார்த்து அழுகிறார், சிரிக்கிறார் அவ்வளவுதான்.
எஸ். ஜே சூர்யா வின் கதாபாத்திரத்தை சைக்கோ தனமாக காட்டுவதா அல்லது பைத்தியக்காரத்தனமாக காட்டுவதாக என்று நினைத்துக் குழம்பி ஒரு மாதிரியாக காட்டி விட்டார் ராதா மோகன். நிச்சயம் இந்த படம் ராதா மோகன் படமே அல்ல எஸ். ஜே. சூர்யாவை வைத்து நடிப்பிற்கான ஆடிஷன் பார்த்து அந்த சீன்களை வைத்து எடிட் செய்து படமாக தந்த மாதிரி தெரிகிறது.
படத்தில் ஒரு சிறிய பலம் என்னவென்றால் யுவன் சங்கர் ராஜாவின் இசை. இளையராஜாவின் தெய்வீக ராகம் பாடலை ரீமேக் செய்து ரசிக்கும் படியாக தந்திருக்கிறார் இந்த ஒரு விஷயம் மட்டும் தான் இந்த படத்திற்கு பலமாக உள்ளது
பொம்மை மொத்தத்தில் பணம் கொடுத்து வாங்கி விளையாடும் அளவிற்கு இல்லை