Friday, June 14
Shadow

‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்பட விமர்சனம்

‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Dulquer Salmaan, Shabeer Kallarakkal, Prasanna, Gokul Suresh, Aishwarya Lekshmi, Saran Shakthi,Chemban Vinod Jose, Shammi Thilakan, Anikha Surendran, Nyla Usha, Shanthi Krishna, Sudhi Koppa

Directed By : Abhilash Joshiy

Music By : Jakes Bejoy, Shaan Rahman

Produced By : Dulquer Salmaan, Zee Studios

 

கேரளாவின் குற்றத் தலைநகரமாக கருதப்படும் ‘கொத்தா’ என்ற நகரத்தில் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் ராஜு (துல்கர் சல்மான்) மற்றும் கண்ணன் (சபீர் கல்லரக்கல்). தன் நண்பர்களுடன் சேர்ந்து கொத்தா நகரத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருகிறார் ராஜு. தன் காதலியான தாராவின் (ஐஸ்வர்யா லட்சுமி) தம்பி கஞ்சாவுக்கு அடிமையாகி இறந்து போனதால் தான் செய்து கஞ்சா பிசினஸுக்கு மட்டும் தடை போடுகிறார் ராஜு. நண்பனுக்கு தெரியாமல் தங்கள் எதிரியான ரஞ்சித்துடன் (செம்பன் வினோத்) சேர்ந்து கொண்டு கஞ்சா வியாபாரத்தை தொடங்க முயல்கிறார் கண்ணன். இது தெரிந்து ராஜு, கண்ணனை கடுமையாக தாக்கி விட்டு விரக்தியில் ஊரை விட்டே சென்று விடுகிறார். அதன் பிறகு கொத்தாவில் மிகப் பெரிய கேங்ஸ்டராக மாறி அட்டூழியம் செய்கிறார் கண்ணன். அவரது அராஜகங்களை பொறுக்க முடியாத சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷாஹுல் (பிரசன்னா) உ.பி.யில் இருக்கும் ராஜுவை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கொத்தாவுக்கு வரவைக்க முயற்சிக்கிறார். ராஜு மீண்டும் வந்தாரா? கண்ணனின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்ததா? – இதுதான் ‘கிங் ஆஃப் கொத்தா’ சொல்லும் திரைக்கதை.

2018-ஆம் ஆண்டு ‘கேஜிஎஃப்’ என்று ஒரு படம் வந்தாலும் வந்தது. அதன்பிறகு வரும் கேங்ஸ்டர் படங்களில் எல்லாம் ராக்கி பாயின் தாக்கம் இல்லாத கதாபாத்திரங்களே இல்லை என்னும் அளவுக்கு பில்டப் வசனங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. படம் தொடங்கி 35 நிமிடம் கழித்துதான் துல்கர் சல்மான் வருகிறார். ஆனால், அதுவரை அவர் குறித்த பில்டப் வசனங்கள் மட்டுமே வருகின்றன. ராஜு என்ற பெயரைச் சொன்னாலே ‘அய்யய்யோ அவரா… ரொம்ப பயங்கரமான ஆளாச்சே’ என்று ஊரே அலறுகிறது. ஆனால், அதற்கான பின்னணியோ, காட்சியமைப்போ தெளிவாக இல்லை. வெறும் வெற்று பில்டப்களால் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைக்க முயன்றிருப்பதால் அதைப் பார்க்கும் நமக்கு ஓர் இடத்தில் கூட எந்தவித தாக்கமும் ஏற்படுவதில்லை.

ஹீரோ தொடங்கி வில்லன், நாயகி, துணை கதாபாத்திரங்கள் என எதுவுமே தெளிவாக வடிவமைக்கப்படவில்லை. ஹீரோ என்ன செய்கிறார்? அவரை ஊரே பயம் கலந்து மரியாதையுடன் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? காதலிக்காக கஞ்சா பிஸினசை விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி அவர் வேறு என்னதான் செய்கிறார் என்று எங்குமே சொல்லப்படவில்லை. இஷ்டத்துக்கு கொலைகளை மட்டுமே செய்து வருகிறார். நாயகனின் நண்பனான கண்ணன் நல்லவரா? கெட்டவரா? அவர் கெட்டவராக மாறுவதாக சொல்லப்படும் சூழல் சற்றும் பொருத்தமாக இல்லை. இரண்டாம் பாதியில் ஹீரோவைக் கொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அவரோடு உட்கார்ந்து தண்ணியடித்து ஆரத்தழுவி விட்டு ஆளை வைத்து கொல்ல முயல்வது எல்லாம் படு அபத்தம்.

ராஜுவாக துல்கர் சல்மான் மொத்தப் படத்தையும் தனது நடிப்பால் தூக்கி சுமக்க முயல்கிறார். ஆனால், எவ்வளவுதான் மேக்கப் போட்டு அவரை ரக்கட் பாய் ஆக காட்ட முயன்றாலும், அவருடைய சாக்லேட் பாய் தோற்றம் எட்டிப் பார்த்து விடுகிறது. அவரை ஊரே கண்டு அஞ்சும் ஒரு ரவுடியாக ஏற்கமுடியவில்லை. எமோஷனல் காட்சிகளில் ஈர்க்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்துக்குப் பிறகு சபீர் கல்லரக்கல்லுக்கு பேர் சொல்லும் பாத்திரம். ஃப்ளாஷ்பேக்கில் நண்பனாகவும், பின்னர் டெரர் வில்லனாகவும் ஸ்கோர் செய்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் பிரசன்னாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் எதுவும் இல்லை. நல்ல நடிகரான செம்பன் வினோத்தை காமெடி வில்லனாக்கி வீணடித்துள்ளனர். நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன், அனுமோல் யாருக்கும் படத்தில் வேலையே இல்லை. சபீரின் மனைவியாக வரும் நைலா உஷாவின் நடிப்பு மட்டும் ஓரளவு பரவாயில்லை ரகம்.

கேங்ஸ்டர் படத்துக்கு தேவையான ‘ரா’வான ஒளிப்பதிவை நிமிஷ் ரவியின் கேமரா கச்சிதமாக செய்துள்ளது. குறிப்பாக, அந்த கால்பந்து விளையாட்டை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. படத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய மற்றொரு அம்சம், மனோஜ் அரக்கலின் கலை இயக்கம். 80 மற்றும் 90-களின் காலக்கட்டத்தை கண்முன்னே நிறுத்தியுள்ளார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்த முயல்கிறது. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

படத்தின் இடைவேளைக் காட்சி கூட சிறப்பாக எழுதப்படவில்லை என்பது சோகம். படத்தின் வில்லன் பாத்திரம் வலுவாக இருந்தால் மட்டும் திரைக்கதை விறுவிறுப்படையும். ஆனால், இங்கு வில்லன் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருப்பதும், ஹீரோவால் முடியாதது எதுவுமே இல்லை என்பது திரைக்கதைக்கு பெரும் பின்னடைவு. படத்தின் கடைசி அரை மணி நேரத்தை ஜவ்வாக இழுத்து வைத்திருக்கிறார்கள். படத்தை முடிப்பதற்கான சாத்தியங்கள் மூன்று இடங்களில் இருந்தும் தொடர்ந்து காட்சிகள் இழுத்தடிக்கப்படுவது டயர்டு ஆக்குகிறது.

எந்த ஆர்ப்பரிப்பும், பிரம்மாண்டங்களும் இல்லாத சாதாரண கதைக்களை எடுத்துக்கொண்டு அதை சுவாரஸ்யமான, நெகிழ்வான வகையில் பார்வையாளர்களுக்கு தருவதுதான் மலையாள திரையுலகின் பாணி. இதில்தான் இந்தியாவின் மற்ற மொழி திரைப்படங்களில் இருந்து அது தனித்து நிற்கிறது.

மொத்தத்தில் இந்த ‘கிங் ஆஃப் கொத்தா’ கேங்ஸ்டர்களுக்கான திரைப்படம்.