‘ரெட் சாண்டல் வுட்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
குரு ராமானுஜம் எழுதி இயக்கிய ஒரு தமிழ் அதிரடி திரில்லர். இதில் வெற்றி, தியா மயூரி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் வினோத் சாகர், கணேஷ் வெங்கட்ராமன், விஸ்வந்த் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்தின் அழகைக் கவர்ந்தது, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு அனைத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. சாம் சிஎஸ்ஸின் ஒலிப்பதிவுகள் மற்றும் பின்னணி இசை படத்திற்கான தொனியை அமைத்தது, மேலும் மிராக்கிள் மைக்கேலின் அதிரடி காட்சிகள் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருந்தன. பார்த்த சாரதி ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் படத்தைத் தயாரித்துள்ளார், மேலும் படத்தின் இசையை சரிகம தமிழ் உலகுக்கு வெளியிடுகிறது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான கர்ணனை (கபாலி விஷ்வந்த்) தேடி ஆந்திர மாநில திருப்பதியில் அலைந்துகொண்டிருக்கிறார் அவரின் நண்பரான குத்துச் சண்டை வீரர் பிரபா (வெற்றி). சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்களைக் கடத்தும் கும்பலிடம் கர்ணன் மாட்டியிருக்கிறார் என்பதையும் அந்தச் செம்மர கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை அரசியல், அதிகாரம், பணபலம் உள்ள ஒருவன் ஆள்கிறான் என்பதையும் பிரபா கண்டறிகிறார். அதைத் தொடர்ந்து, தன் நண்பனை மீட்கத் தனியாளாகக் களமிறங்குகிறார் பிரபா. இறுதியில் கர்ணனை மீட்டாரா, கடத்தல் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா, இதற்குப் பின்னால் பலியாகும் ஏழை தமிழர்களின் வலி என்ன என்பதைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் குரு ராமானுஜத்தின் ‘ரெட் சாண்டல் வுட்’ திரைப்படம்.
கதாநாயகி தியா மயூரி மூன்று காட்சிகளுக்கு மட்டும் வந்து கண்ணைக் கசக்கி விட்டு மறைந்துவிடுகிறார். வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ ராம் சில இடங்களில் மட்டும் மிரட்டுகிறார். கபாலி விஷ்வந்த், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். இவர்கள் தவிர கணேஷ் வெங்கட் ராம், வினோத் சாகர், மாரிமுத்து, ரவி வெங்கட் ராமன் ஆகியோர் சம்பிரதாய கதாபாத்திரங்களாக எந்த அழுத்தமும் தராமல் வந்து போகிறார்கள்.
வியாசர்பாடி இளைஞர்களின் வாழ்க்கை, குடும்ப வறுமை, காதல், செம்மர கடத்தல், அதன் அரசியல், ஆக்ஷன் எனப் பல கிளைகள் உள்ள திரைக்கதையை 90 நிமிடங்களில் அடைக்க முற்பட்டிருக்கிறார். அதனாலேயே காலில் சுடுதண்ணீர் ஊற்றியதைப் போல அவரசகதியாக ஓடும் திரைக்கதை கதைக்கருவையே பாழ்ப்படுத்தியிருக்கிறது. அதனால், எந்த எமோஷனல் காட்சிகளும் மனதில் நிற்கவில்லை.
முக்கியமாக, கதாநாயகனின் பின்கதையோ அவரின் குணநலன்களோ போதுமானதாக விவரிக்கப்படாததால், அவர் சிக்கலில் மாட்டும்போதோ ஆக்ஷன் அவதாரம் எடுக்கும்போதோ நமக்குள் எந்த சலனமும் நிகழவில்லை. மேலும், தன் உயிரையே பணயம் வைத்துக் களமிறங்கும் அளவிற்குக் கதாநாயகனுக்கும் அவரின் நண்பருக்கும் உள்ள நட்பை விளக்கும்படியும் ஒரு காட்சிக் கூட இல்லை. அதனால், தொடக்கத்திலிருந்தே கதாநாயகன் உட்பட எந்தக் கதாபாத்திரத்தோடும் ஒன்ற முடியவில்லை.
படத்திற்குப் பிரதான பலமாக சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு உள்ளது. வனப்பகுதியில் நடக்கும் இரவு நேரச் சண்டைக்காட்சிகளில் அவரின் உழைப்பை உணர முடிகிறது. பாடல்களில் சாம் சி.எஸ் சோபிக்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் சில ‘விறுவிறு’ காட்சிகளுக்கு மட்டும் கைகொடுத்திருக்கிறார். ஏனைய இடங்களில் இடைவேளை இல்லாத இசையால் காதை அடைக்க வைக்கிறார். ஏ.ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பில் மொத்த படமும் ஒருவித கோர்வையின்றி ஓடுகிறது.
இரண்டாம் பாதியில் உள்ள பாதி காட்சிகளை யார் வெட்டி கடத்தினார்கள் என்று கேட்கும் அளவிற்கு துண்டுதுண்டாக, லாஜிக் ஓட்டைகளால் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர். எல்லா காட்சிகளும் தொடர்பற்று நம்பகத்தன்மையற்றே நகர்கின்றன. ‘இது எப்படி?’, ‘இவருக்கு எப்படித் தெரியும்?’, ‘அவர் என்ன ஆனார்?’ எனப் படம் பார்க்கிறோமா குவிஸ் போட்டியில் விளையாடுகிறோமா என்ற குழப்பமே எஞ்சி நிற்கிறது.
செம்மர கடத்தலில் அமைச்சர் தொடங்கி, வனத்துறை, காவல்துறை, ரவுடிகள் வரையுள்ள தொடர்பை விளக்கும் காட்சிகளும், வனத்துறையினரிடம் அப்பாவி தமிழர்கள் சிக்கிப் பலியாகும் காட்சிகளும் நம் மனதில் அழுத்தமாகப் பதிகின்றன. இதற்குத் தொழில்நுட்ப ரீதியாக திரையாக்கம் கைகொடுத்திருக்கிறது.
செம்மரத்தாலான பொருள்கள் சிறு உடல் உபாதைகள் தொடங்கி புற்றுநோய் வரை தடுப்பதாகவும், அணுக்கதிர் வீச்சையே தடுக்கும் வல்லமையுள்ளதாகவும் தொடக்கத்தில் அனிமேஷன் காட்சிகளால் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் இப்பரப்புரைக்கும் இந்தக் கடத்தல் குற்றப்பின்னணியைப் பேசும் கதைக்கருவிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கடைசி வரை விளக்கவில்லை. இந்தக் கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
மொத்தத்தில், இந்த ‘ரெட் சாண்டல் வுட்’ உண்மையின் குரல்.