‘துடிக்கும் கரங்கள்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Vimal, Misha Narang, Sathish, Suresh Menon, Sangili Murugan, Soundara Raja, Anand Nag, Subiksha
Directed By : Veludoss
Music By : Ragav Prasath
Produced By : K.Annadurai
நாயகன் விமல் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு, அதன் மூலம் மக்கள் பிரச்சனைகளை பேசி வருகிறார். இதனால், அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கிறார். இதற்கிடையே, சென்னையில் படிக்க வந்த இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போகிறார். அவரை தேடி அலையும் அவரது தந்தைக்கு உதவி செய்யும் நோக்கில் அந்த இளைஞர் பற்றிய தகவல்களை தனது யூடியுப் சேனலில் விமல் வெளியிடுகிறார். அதை தொடர்ந்து அந்த இளைஞர் பற்றி விமலுக்கு தெரிய வரும் சில தகவல்களை வைத்து அவரை தேடும் போது, மர்மமான முறையில் இறந்த ஐஜி-மகளுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வர, இருவர் பற்றியும் தொடர்ந்து விசாரிக்கும் போது ஐஜி மகளின் மரணம் கொலை என்ற உண்மையை விமல் கண்டுபிடிக்கிறார். இதனால் விமலை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்த, ஐஜி மகள் கொலை மற்றும் காணாமல் போன இளைஞர் பற்றிய உண்மைகளையும், இதன் பின்னணியில் இருப்பவர்களையும் விமல் எப்படி கண்டுபிடிக்கிறார்?, என்பதை ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் முறையாக ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படத்தில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால், இந்த கதையில் அவர் வழக்கமான பாணியிலேயே நடித்திருப்பதை தவிர்திருக்கலாம். படம் முழுவதும் மாடர்ன் உடையில் யூத்தாக வலம் வந்தாலும், உடல் மொழியில் எந்தவித மாற்றமும் இன்றி அதே பழைய விமலாகவே வருகிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் நாம் ஏற்கனவே பார்த்த விமல் தான் என்றாலும், ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் சற்று புதிய விமலாக ரசிக்க வைக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் மிஷா நாரங்கிற்கும் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விமல் காதலிக்க, அவரை நினைத்து பாட்டு பாட ஒரு பெண் வேண்டும் அல்லவா அதற்காக மட்டுமே அம்மணி பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஐஜி வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மேனனின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனை. ஆனால், அப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மேனனின் ரியாக்ஷன் மட்டும் எல்லாம் காட்சிகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செளந்தரராஜனின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் அமர்க்களமாக அறிமுகமானாலும், அதன் பிறகு வரும் காட்சிகளில் அவர் டம்மியாக்கப்படுகிறார். இருந்தாலும், தனக்கு கொடுத்த வேடத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.
கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக் மற்றும் சுபிக்ஷா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். சங்கிலி முருகனின் அனுபவம் வாய்ந்த நடிப்பும், அவரது வேடமும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.விமலின் நண்பராக நடித்திருக்கும் சதிஷ், வழக்கம் போல் காமெடி என்ற பெயரில் கடித்து கொதறுகிறார். நல்ல வேலை அவரை படம் முழுவதும் பயன்படுத்தவில்லை.ஒளிப்பதிவாளர் ராமி, கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, பாடல் காட்சிகளையும், விமலையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.ராகவ பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.சிறுத்தை கணேஷின் ஆக்ஷன் காட்சிகள் எளிமையாக இருந்தாலும் ரசிக்க கூடிய வகையில் இருக்கிறது. படத்தொகுப்பாளர் சந்திரகுமார்.ஜி திரைக்கதை தொய்வடையதாவாறு காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் கதையை கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் வேலுதாஸ், சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனை பற்றி பேசியிருக்கிறார்.
ஐஜி-மகளின் கொலையில் தொடங்கும் படம் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்து விடுகிறது. அதை தொடர்ந்து படம் பரபரப்பாக நகர்ந்தாலும், காதல் காட்சிகளால் பல இடங்களில் நொண்டியடிக்க செய்கிறது. அதே சமயம், தங்கைக்காக போலீஸ்காரரையே விமல் பந்தாடும் காட்சிகள் காதல் காட்சிகளினால் ஏற்பட்ட தொய்வை மறந்து ரசிகர்களை கைதட்ட வைக்கிறது.ஐஜி மகளின் கொலையில் இருக்கும் மர்மத்திற்கு பின்னணியில் இயக்குநர் வைத்திருக்கும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொள்ள செய்கிறது.போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஐஜி மகளின் கொலையால் ஆரம்பமே படம் எந்த பிரச்சனை பற்றி பேசப்போகிறது என்பதை யூகித்து விட முடிகிறது. இருந்தாலும், பிரியாணி மேட்டரை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் வேலுதாஸ்.