‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Samuthirakani, Abhirami, Lakshmy Ramakrishnan, Mysskkin, Aadukalam Naren, Paval Navaneethan, Mullaiarasi, Robo Shankar, Ashok, Anupama Kumar
Directed By : Lakshmy Ramakrishnan
Music By : Ilaiyaraaja
Produced By : Dr.Ramakrishnan
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள “ஆர் யூ ஓகே பேபி “ திரைப்படம் எப்படி இருக்கிறது விரிவாக காண்போம்.இந்தப் படத்தை அவரது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் நேயர்களுக்கு சமர்பிப்பதாக சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவே வருகிறார்.
படம் ஆரம்பம் முதல் பாதி வரையிலும் மையக்கதைக்கு நகர்வதற்கே சற்று நேரம் ஆகிறது. படத்தில் அபிராமி, சமுத்திரகனி, லஷ்மி ராமகிருஷ்ணன், மிஷ்கின், அனுபமா குமார் என சீனியர் நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்திருந்தாலும் தன் தேர்ந்த நடிப்பால் சபாஷ் போட வைக்கிறார் ஷோபாவாக நடித்திருக்கும் முல்லையரசி.இளையராஜாவின் இசை கதையோட்டத்தில் கலந்து செல்கிறது. குழந்தையை சூழல் காரணமாக விற்கும் ஷோபாவின் உணர்வுகள், சமுத்திரகனி-அபிராமி தம்பதியின் பாசப்போராட்டம், சைல்ட் டிராஃபிக்… இதற்கிடையில் ‘சொல்லாததும் உண்மை’ என பல விஷயங்களை இந்த படத்தில் இணைத்திருக்கிறார்கள். ஆனால், எதுவுமே முழுமையடையாமல் தொக்கி நிற்பதுதான் படத்திற்கான மைனஸ். உணர்வுப்பூர்வமாக காட்சிகளை கட்டமைப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அதைத் தவற விட்டிருக்கிறார்கள்.
கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். தன் குழந்தையை மீட்டுத் தர சொல்லி மீடியாவுக்கு செல்லும் பெண், திடீரென குழந்தைகள் நல வாரியத்துக்கு செல்வது, அங்கிருந்து வழக்கறிஞர்கள் இவரது குழந்தையை மீட்டுத்தர ஆர்வம் காட்டுவது, சிபிசிஐடி உள்ளே வருவது என பல காட்சிகள் தெளிவில்லாமல் குழப்பமாகவே அடுத்தடுத்து கடக்கிறது. அபிராமி- சமுத்திரகனி தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்கும் சிபிசிஐடி அதை காப்பகத்தில் விடுகிறார்கள். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஷோபா எடுக்கும் முடிவு முன் கூட்டியே கணிக்க முடிவதாக அமைகிறது.
அதேபோல, ஷோபாவின் காதலராக வரும் அசோக் மற்றும் அவரது அப்பாவின் கதாபாத்திரமும் குழப்பமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சமுத்திரகனி, அபிராமி, குழந்தைக்கு இடையே இருக்கும் எமோஷனல் காட்சிகள் சுத்தமாக ஒட்டவே இல்லை. தன் குடும்பத்திலும் ஆதரவு இல்லை, நம்பி வந்தவனும் ஏளனமாக நடத்துகிறான் எனும் போது அத்தனை ஆயிரம் பேர் பார்க்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ‘நீ தான் வேணும்’ என தன் காதலன் காலைப் பிடித்து ஷோபா அழுவது போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எல்லாம் படு அபத்தம். கடைசியில் அவர் என்ன ஆனார் என்பதும் காட்சிப்படுத்தப்படவில்லை.
ஆக மொத்தத்தில், உணர்வுப்பூர்வமான காட்சிகளை இன்னும் வலுப்படுத்தி கதையின் காட்சிகளை முழுமையாக்கி வலுப்படுத்தியிருந்தால் டபுள் ஓகே சொல்லி இருக்கலாம் இந்த ‘ஆர் யூ ஓகே பேபி?’ படத்திற்கு.