Sunday, October 13
Shadow

‘டீமான்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Sachin, Abarnathi, Kumki Aswin, Suruthi Periyasamy, KPY Prabakaran, Raveena Daha, Navya suji, Navya Tharani, Abishek

Directed By : Ramesh Pazhanivel

Music By : Ronnie Raphael

Produced By : R.Somasundaram

உதவி இயக்குநரான நாயகன் சச்சினுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி, திகில் கதை ஒன்றை திரைப்படமாக இயக்குவதற்கான பணிகளில் ஈடுபடுபவர், புதிய வாடகை வீட்டில் குடியேறுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அந்த வீட்டுக்கு சென்றவுடன், பயங்கரமான கனவுகள் மற்றும் சில அமானுஷ்யமான சம்பவங்களால் தூக்கம் இல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். தனது நிலை குறித்து மருத்துவரிடம் சொல்லி சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் சச்சினின் ஒவ்வொரு நாளும் பயங்கரமானதாக இருக்கிறது. அவர் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றாலும், தன்னை அறியாமல் அந்த வீட்டுக்குள் திரும்ப வந்துவிடுகிறார். இதனால், அந்த வீட்டைப் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் சச்சினுக்கு, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் என்ன?, அந்த வீட்டில் இருந்து சச்சின் தப்பித்தாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘டீமான்’.

 

நாயகனாக நடித்திருக்கும் சச்சின் காதல், பயம், கோபம் என அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். திகில் படம் என்றாலும் தனது உணர்வுகள் மூலம் மட்டுமே ரசிகர்களிடத்தில் பயத்தை கடத்த வேண்டும் என்ற சாவலை மிக சிறப்பாக செய்து பாராட்டுபெறுகிறார்.நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதியின் வேடம் திணிக்கப்பட்டது போல் இருக்கிறதே தவிர படத்திற்கு எந்த விதத்திலும் துணையாக இல்லை. அதனால், அவருடைய வேடத்தை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை.

 

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதிலும் கும்கி அஷ்வின் காமெடி செய்ய வேண்டும் என்ற பெயரில், சீரியஸான இடத்தில் கூட ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிப்பது கொடுமை. அனுபவம் வாய்ந்த இணை இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஆர்.சோமசுந்திரத்தின் வேடம் எதற்கு என்றே தெரியவில்லை.அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜெயின் குடும்ப உறுப்பினர்களாக நடித்திருப்பவர்கள், நாயகனின் தந்தை, வீடு வாடகைக்கு விடுபவர் என படத்தில் பலர் நடித்திருந்தாலும் நாயகனை சுற்றியே முழு கதையும் நகர்கிறது. அவரும் தன்னால் முடிந்தவரை படத்தை தோளில் சுமந்திருக்கிறார்.

கதாநாயகனுக்கு பிறகு படத்தில் கவனம் பெறுபவர் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமார் தான். படத்தின் ஒவ்வொரு கோணங்களையும் ரசித்து ரசித்து படமாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். திகில் காட்சிகளையும், வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும் பயமுறுத்தும் வகையில் படமாக்கியிருப்பவர், கதாநாயகன், கதாநாயகி சந்திப்பு நடைபெறும் காட்சி, நண்பர்கள் கூடும் காட்சி, அடுக்குமாடி குடியிருப்பை காட்டிய விதம் என அதிகம் மெனக்கெட்டிருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.இசையமைப்பாளர் ரோணி ரபேலின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு. அதிகம் சத்தம் இல்லாமல் பின்னணி இசையமை அமைதியாக கையாண்டிருப்பது படபடப்பான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரு வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குந ரமேஷ் பழனிவேல், வழக்கமான திகில் படங்களின் பாணியில் சொல்லமால் சற்று வித்தியாசமான முறையில் இப்படத்தை கையாண்டிருக்கிறார். குறிப்பாக பேய் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் ஒரு மனிதனை நேரடியாக பாதிக்காமல், மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை சொல்வதற்காக அவர் பயணித்த வழியில் மிகப்பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறார்.

தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லாமல் அதை, காதல், திரைப்பட இயக்கம் அதை சார்ந்த கதாபாத்திரங்கள் போன்ற கமர்ஷியல் விசயங்களோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் பழனிவேல். ஆனால், அவை அனைத்தும் திரைக்கதையில் திணிக்கப்பட்டவைகளாக இருப்பதோடு, படத்தை தொய்வடையவும் செய்கிறது.இருந்தாலும், நாயகன் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் மற்றும் அவரிடம் நடிப்பு வாங்கிய விதம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் இறப்புக்கு பின்னணி போன்றவை படத்தை ரசிக்க வைக்கிறது.