‘மேரி கிறிஸ்துமஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Vijay Sethupathi, Katrina Kaif, Kavin Babu, Radhika Sarathkumar, Sanmugarajan, Radhika Apte, Rajesh, Pari Maheshwari Sharma, Ashwin Kalshekar
Directed By : Sriram Raghavan
Music By : Pritam and BGM – Daniel B.George
Produced By : Ramesh Taurani, Sanjay Rautray, Jaya Taurani, Kewal Gar
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “மேரி கிறிஸ்துமஸ்”(Merry Christmas). ஹீரோவாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக கத்ரீனா கைஃப்பும் நடித்துள்ள இப்படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் எடுக்கபட்டுள்ளது. இதில் தமிழ் வெர்ஷனில் இவர்கள் இருவரையும் தவிர்த்து ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், காயத்ரி, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையும், மது நீலகண்டன் ஒளிப்பதிவும் செய்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
தொடக்கத்தில் ஜாலியாகவும் பின்னர் கனமாகவும் மாறும் ஆல்பர்ட் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை ரசிக்கும்படி வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. சில வசன உச்சரிப்புகளில் ‘வழக்கமான விஜய் சேதுபதியாகவே’ அவர் மாறினாலும், அவை காமெடி காட்சிகள் என்பதால் நம்மைச் சிரிக்க வைத்துத் தப்பிக்கிறார். மர்மம், பதற்றம், வஞ்சகம், காதல், பாசம், கோபம் எனப் பல பரிணாமங்களைக் கொண்ட மரியா கதாபாத்திரத்தைக் கச்சிதமாக கண்முன் கொண்டுவந்திருக்கிறார் கத்ரீனா கைஃப். தமிழ் வசனங்களுக்கு ஏற்ற உதட்டு அசைவு சிறப்பு!
கத்ரீனாவின் மகளாக வரும் சிறுமி பரி ஷர்மாவிடம் இருந்து தேவையான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குநர். கவின் ஜே.பாபு, ராதிகா, சண்முகராஜன், ராஜேஷ் ஆகியோர் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக ராதிகா, சண்முகராஜன் ஆகியோரின் அனுபவ நடிப்பு டார்க் காமெடிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. ராதிகா ஆப்தே கௌரவ தோற்றத்தில் வந்து போகிறார்.
ப்ரீத்தமின் இசையில் யுகபாரதியின் வரிகளில் ‘காணாத காதல்’ பாடல் இதம் தருகிறது. டானியல்.பி.ஜார்ஜின் பின்னணியிசையானது சஸ்பென்ஸ், த்ரில்லர், ரொமான்ஸ் என எல்லா தருணங்களிலும் அட்டகாசம் செய்திருக்கிறது. முக்கியமான காட்சிகளில் இசைக்கப்படும் சிம்பொனி இசைக்கோர்வைகள் படத்திற்கு முதுகெலும்பாக மாறியிருக்கின்றன.
இயக்குநர் உருவாக்கியிருக்கும் காமிக்கலான ஒரு கற்பனை உலகத்திற்கு தன் உழைப்பால் உயிர்கொடுத்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் மயூர் ஷர்மா. வீட்டின் அறைகள், கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருள்கள், அக்காலத்திய தியேட்டர்கள், டாக்ஸி என ஒவ்வொன்றிலும் நேர்த்தியையும் கச்சிதத்தையும் காண முடிகிறது. அனைத்தா ஷெராஃப், சபீனா ஹல்தா ஆகியோரின் ஆடை வடிவமைப்பும், நிர்மல் ஷார்மாவின் டி.ஐ. கலரிஸ்ட் பணியும் கவனிக்க வைக்கின்றன.
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை ரொமான்ஸ், டார்க் ஹ்யூமர் கலந்த ஃப்ளேவரில் கொடுத்திருக்கிறார் ‘அந்தாதுன்’ இயக்குநர். இந்தி மட்டுமல்லாது, தமிழிலும் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தோடு இணைந்து தொடங்கும் முதற்பாதி, குறிப்பாக அந்த ரொமான்ஸ் காட்சிகள் போன்றவற்றில் எளிதில் ஒன்றிவிட முடிகிறது. காட்சிகள் நீளமாகவும் நிதானமாகவும் நகர்ந்தாலும், ரசிக்கும்படியான வசனங்களும் திரையாக்கமும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கின்றன. ஆனாலும் வேகத்தடையாக மாறும் பாடல்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
குறைந்த அளவிலான கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு புதிய ஃப்ளேவரில் த்ரில்லரை எழுதிய விதத்தில் பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய எழுத்துக் கூட்டணி சபாஷ் போட வைக்கிறது.
அதேநேரம், படத்தின் பிரதான ட்விஸ்ட்டும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் நம்பும்படியாக இல்லை. குறிப்பாக, அபார்ட்மென்ட்டை வைத்து வரும் அந்த மேலே கீழே விளையாட்டில் சுத்தமாக நம்பகத்தன்மை இல்லை! அதிலும் அந்த ட்விஸ்ட்டுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் திரைக்கதையில் காட்சிகள் வைக்கப்படாததால், அதன் தொடர்ச்சியாகப் பல கேள்விகளும் லாஜிக் ஓட்டைகளும் எட்டிப் பார்க்கின்றன. பிரதான கதாபாத்திரங்களின் நடிப்பு, அவர்களின் சின்ன சின்ன முகபாவங்கள், வசனங்கள் போன்றவை அந்த ஓட்டைகளை அடைக்கப் பெரும்பாடு படுகின்றன.
‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று கொண்டாடப்படும் இயக்குநர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் படங்களின் காட்சி நகர்வுகளை நினைவூட்டும் வகையிலான இப்படத்தின் ஒட்டுமொத்த திரைமொழி ஆக்கமும் நம்மை ரசிக்க வைத்தாலும், பிரதான கதாபாத்திரங்களின் ஆழ்மன பக்கங்களையும் அவர்களுடைய குற்றங்களின் நியாயங்களையும் இன்னும் அழுத்தமாகவும் நேர்மையாகவும் அலசியிருக்கலாம்.
மொத்தத்தில் மேரி கிறிஸ்துமஸ் படம் பொறுமையாக இருந்து ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம்..!