Thursday, February 6
Shadow

’சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

 

Casting : RJ Balaji, Sathyaraj, Lal, Meenakshi Chaudhary, Kishen Das, Ann Sheetal, Thalaivasal Vijay, John Vijay, Robo Shankar, Y. G. Mahendran

 

Directed By : Gokul

 

Music By : Songs: Vivek–Mervin, Score: Javed Riaz

 

Produced By : Vels Films International – Ishari K. Ganesh

 

 

 

இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பியாய் பழகும் ஒரு கிராமத்தில் சிறுவயது முதலே நண்பர்களாக வளர்கின்றனர் கதிரும் (ஆர்.ஜே.பாலாஜி), பஷீரும் (கிஷன் தாஸ்). அந்த ஊரில் சலூன் கடை வைத்திருக்கும் சாச்சாவின் (லால்) திறமையைக் கண்டு, தானும் அது போல ஒரு முடிதிருத்தும் நிபுணராக வரவேண்டும் என்ற லட்சியத்தை மனதில் வைக்கிறார் கதிர். பல்வேறு தோல்விகள், தடைகளைக் கடந்து படிப்பை முடிக்கும் அவருக்கு தான் விரும்பிய ஒரு காதல் வாழ்க்கை அமைகிறது. ஆனால் சலூன் கடை வைக்கும் தன்னுடைய லட்சியத்தை அடைய முயற்சிக்கும் அவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. இறுதியாக எல்லா தடைகளையும் கடந்து தனது லட்சியத்தை நாயகன் அடைந்தாரா என்பதே ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் கதை.

 

படம் தொடங்கும்போதே ஹீரோவின் சிறுவயது ஃப்ளாஷ்பேக்கும் தொடங்குகிறது. நல்லவர்களை மட்டுமே கொண்ட அழகான கிராமம், வயதுக்கு மீறிய வசனங்களை ஓவர் ஆக்டிங் உடன் பேசும் சிறுவர்கள், செயற்கையான காட்சியமைப்பு என ஏறக்குறைய ஒரு 40 நிமிடங்களுக்கு அந்த ஃபிளாஷ்பேக் ஓடுகிறது. இதுவே பார்ப்பவர்களுக்கு கிட்டத்தட்ட கடும் சோர்வை ஏற்படுத்திவிடுகிறது.

 

 

 

 

நாயகன் சிறுவயதில் அந்த ஊரின் ஆஸ்தான சலூன் கடைக்காரரை பார்த்து தானும் சலூன் கடை வைக்க ஆசைப்படுகிறார். ஒரு 20 நிமிடத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டிய ஃப்ளாஷ்பேக்கை கிட்டத்தட்ட முதல் பாதியின் முக்கால்வாசிக்கு இழுத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அதிலும் சிறுவர்களை வைத்து காமெடி என்ற பெயரில் வைக்கப்பட்ட வசனங்கள் எல்லாம் சிரிப்புக்கு பதில் எரிச்சலை தருகின்றன. அந்தக் காட்சிகளில் எந்தவித அழுத்தமும் இல்லை.

 

கிட்டத்தட்ட

சத்யராஜின்

அறிமுகத்துக்குப் பிறகு படம் ஓரளவு நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அதன் பிறகு வரும் காமெடி காட்சிகள் தான், இந்த படத்தின் பலமே. கோகுலின் ஏரியாவான நகைச்சுவை இந்தக் காட்சிகளில் நன்றாக எடுபட்டுள்ளன. சத்யராஜின் கஞ்சத்தனம் கொண்ட கதாபாத்திர வடிவமைப்பும், பாரில் நடக்கும் காட்சிகளும் ரகளை. ரோபோ ஷங்கர் பேசும் மாடுலேஷனும், அவருக்கும் சத்யராஜுக்கு இடையிலான உரையாடல்களும் குபீர் ரகம். நிச்சயம் இவை பார்வையாளர்களால் ரசிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

ஆனால், இடைவேளையோடு நகைச்சுவையும் படத்திலிருந்து காணாமல் போய்விடுகிறது. அதன்பிறகு சீரியஸ் மோடுக்கு மாறும் படம், தாறுமாறாக எங்கெங்கோ செல்கிறது. இயற்கை பாதுகாப்பு, அடித்தட்டு மக்களின் பிரச்சினை என எங்கெங்கோ சுற்றி நம்மையும் தலைசுற்ற வைக்கிறது. இறுதியாக திடீர் திடீர் என்று எல்லாரும் நல்லவர்களாக மாற சுபம் போட்டு ஒருவழியாக படம் முடிகிறது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு முன்னணி நடிகரின் கேமியோ காட்சியும், அது படமாக்கப்பட்ட விதமும் சிறப்பு. அவர் யார்? கடவுளா? இயற்கையா? – இந்தக் கேள்வியை பார்வையாளர்களின் யூகத்துக்கே விட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

கிளைமாக்ஸுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் டான்ஸ் ஷோ தொடர்பான காட்சிகள், குடிசை வாழ் மக்களை அரசு வெளியேற்றுவது, கிளிகள் சிங்கப்பூர் சலூனுக்கு வருவது என சென்டிமென்ட் என்று நினைத்து வைக்கப்பட்ட காட்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை. எமோஷனல் காட்சிகளை அழுத்தமாக எழுதியிருந்தால் இரண்டாம் பாதி மனதில் பதியும்படி இருந்திருக்கலாம்.

 

 

முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் முன்னேறி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் சிரத்தையுடன் நடித்துள்ளார். படத்தின் இரண்டாவது ஹீரோ சத்யராஜ் தான் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய நகைச்சுவை திறனால் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறார் சத்யராஜ். முதல் பாதி முழுக்க அவர் செய்யும் அலப்பறைகளுக்கு அரங்கம் எதிர்கிறது.

 

நாயகியாக மீனாட்சி சவுத்ரி. படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தும் எந்த இடத்திலும் அவர் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிஷன் தாஸ், ரோபோ ஷங்கர், தலைவாசல்

விஜய்

உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கின்றனர். பக்கத்து மாநிலத்திலிருந்து நல்ல நல்ல நடிகர்களை எல்லாம் கூட்டிவந்து அவர்களுக்கு பலவீனமான கதாபாத்திரத்தை கொடுத்து அழகுபார்ப்பது தமிழ் இயக்குநர்களுக்கு கைவந்த கலை போலும். அதற்கு நடிகர் லாலும் தப்பவில்லை. இயல்பான நடிகரான அவரை, எவ்வளவு வீணடிக்க முடியுமோ அவ்வளவு வீணடித்திருக்கின்றனர்.

 

விவேக் – மெர்வினின் பாடல்கள் சுமார் ரகம். ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை படத்தை பல இடங்களில் தூக்கி சுமக்க முயல்கிறது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு ப்ளாஷ்பேக் காட்சிகளில் கிராமத்தின் பசுமையையும், கிராபிக்ஸ் காட்சிகள் துருத்திக் கொண்டு தெரியாத வகையிலும் நிறைவை தந்திருக்கிறது. சிங்கப்பூர் சலூன் செட்டும், அதை சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளிலும் கலை இயக்குநர் ஜெயச்சந்திரனின் நேர்த்தி தெரிகிறது.

 

தன் கனவை அடையத் துடிக்கும் கிராமத்து இளைஞன் என்ற கதைக்களத்துக்கு ஏற்ப ‘ஷார்ப்’ ஆன திரைக்கதையை அமைக்காமல் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட், இயற்கை பாதுகாப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் வலி என இஷ்டத்துக்கு கலந்து கட்டி அடித்திருப்பதால் எந்த ஏரியாவிலும் முழுமையாக இல்லாமல் படம் அந்தரத்தில் தொங்குகிறது. முதல் பாதியில் இருந்த காமெடி ரூட்டையே பிடித்து முழு படத்தையும் அதே பாணியில் சொல்லியிருந்தால் ஒரு நல்ல அனுபவத்தை தந்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’.

 

 

மொத்தத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு கத்திரிக்கோல் போட்டு விட்டது.