Tuesday, December 3
Shadow

’சிங்கப்பூர் சலூன்’ சக்சஸ் மீட்!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது.

கலை இயக்குநர் ஜெய், “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சலூன் அதைச்சுற்றியுள்ள வீடுகள் என மூன்று ஏக்கரில் செட் உருவாக்கினோம். எங்களுக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. கேமரா மேனும் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்தார். என்னுடைய குழுவினருக்கும் நன்றி”.

 

பின்னணி இசையமைப்பாளர் ஜாவித், “எனக்கு இந்தப் படம் மிக முக்கியமானது. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் ஐசரிக்கு நன்றி. குறிப்பாக இரண்டாம் பாதி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. உங்களுக்கும் படம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி”

பாடலாசிரியர் உமா தேவி பேசியதாவது, “இந்தப் படத்தில் பால்வீதியில் என்ற பாடல் எழுதி இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக எனக்கு அமைந்தப் பாடல் அது. கோகுல் சார் அதை சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருந்தார். கோகுல் சாருடன் முதல் படம் இது. டியூன் கேட்டதும் எனக்கு உடனே எழுத வேண்டும் என்று தோன்றிய பாடல் இது. மறந்து போன நிறைய தமிழ் சொற்களை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. பலரும் தொடாத சிகை அலங்காரக் கலைஞர்களின் கதையைத் தொட்டதற்கு படக்குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துகளும்”.

நடிகர் இமான் அண்ணாச்சி, “இந்தப் படத்தில் எல்லா பெரிய கதாபாத்திரங்களும் முடித்த பின்புதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. கோகுல் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார் படம் என்றதும் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். படத்தை நான் கள்ளக்குறிச்சியில்தான் பார்த்தேன். அங்கு திரையரங்குகள் நிரம்பி வழிந்ததைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. என் கதாபாத்திரத்தையும் அங்கு ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்கள். இந்த சிறிய, அரிய வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹீரோ பாலாஜி, சத்யராஜ், சின்னி ஜெயந்த் என படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் சின்னி ஜெயந்த், “இந்தப் படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. விழுப்புரத்தில் உள்ள தியேட்டரில்தான் நான் படம் பார்த்தேன். அங்கே ரசிகர்கள் அனைவரும் அத்தனை கொண்டாட்டமாகப் பார்த்தார்கள். ‘சவுத் இந்தியன் அமீர்கான்’ என பாலாஜிக்கு நான் பட்டம் கொடுக்கிறேன். ஏனெனில், அவரது ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கும். கல்வித்துறை, கலைத்துறை என இரண்டையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் ஐசரி சாருக்கு எனது வாழ்த்துகள். இதுபோன்ற நிறைய வெற்றி இந்த படக்குழுவுக்கு கிடைக்க வாழ்த்துகள்”.

இயக்குநர் கோகுல், “’சிங்கப்பூர் சலூன்’ படம் மூலம் என் கனவு இன்னும் அருகில் வந்துள்ளது. இந்தப் படத்திற்காக சிகை அலங்காரக் கலைஞர்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அதில் ஒருவர், ‘என் கத்தி செய்யாததை இந்த கதை செய்திருக்கிறது’ என்று சொன்னார். என் படத்தின் நோக்கம் நிறைவேறியது என்று மகிழ்ந்த தருணம் அது. அவர்களை ஒரு சாதியாக கட்டமைத்து விட்டோம். நான் சாதிக்கு அப்பாற்பட்டவன். அதனால்தான் படத்தின் ஆரம்பத்தில் ஒரு இஸ்லாமிய பார்பரை காட்டியிருப்பேன். இது குலத்தொழில் கிடையாது. இந்த விஷயம் உங்கள் அனைவருக்கும் போய் சேர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. இதற்கு ஒத்துழைத்த ஹீரோ பாலாஜி, தயாரிப்பாளர் ஐசரி சார், படக்குழுவினருக்கு நன்றி. நான் இயக்கியப் படங்களிலேயே இதுதான் எனக்கு சிறந்தப் படம். நன்றி”

பிரியங்கா ரோபோ ஷங்கர், “ரோபோ ஷங்கர் கள்ளக்குறிச்சியில் ஒரு படப்பிடிப்பில் உள்ளதால், உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லதான் நான் இங்கு வந்தேன். ரோபோவுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த கோகுல் அண்ணாவுக்கும் தயாரிப்பாளர் ஐசரி சாருக்கும், படத்தில் உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. ரோபோவுக்கு படத்தில் இவ்வளவு பெரிய இடம் கொடுத்த சத்யராஜ் சாருக்கு பெரிய நன்றி. எங்கள் குடும்பம் சார்பாக அனைவருக்கும் நன்றி”.

எடிட்டர் ஆர்.கே. செல்வா, “நீண்ட நாட்கள் கழித்துப் படத்தில் எந்தவிதமான அடிதடியும் வன்முறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இந்தப் படம் பார்த்தோம் என படம் பார்த்தவர்கள் எங்களிடம் சொன்னார்கள். அதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றி. இயக்குநர் கோகுல் மிகக் கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஹேர் ஸ்டைலிஷ்ட் பற்றிய படம் என்ற கதை கேட்டதுமே எனக்கு ஆர்வம் வந்தது. ஆர்ஜே பாலாஜியின் நடிப்பும் இந்தப் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டிருக்கிறது. ஐசரி சாரும் படத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார். படத்தை வெற்றிப் படமாக்கிய உங்களுக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “கடந்த ஜனவரி 25 ‘சிங்கப்பூர் சலூன்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலுக்கு இந்த வருடம் முதல் வெற்றி இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த வருடம் நிறையப் படங்கள் வெளியானது. அதில் அதிக வசூல் பெற்றது ‘சிங்கப்பூர் சலூன்’ படம்தான். இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்ற ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. ’எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலுக்கு பாலாஜி நடித்துள்ள மூன்றாவது படமும் ஹிட்டாகியுள்ளது மகிழ்ச்சி. இந்தக் கதையில் ஆர்ஜே பாலாஜியால் நடிக்க முடியுமா எனப் பலரும் கேட்டனர். அதற்கானப் பதிலடியை படத்தில் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார் அவர். சத்யராஜ், ரோபோ ஷங்கர், சின்னி ஜெயந்த், குட்டிப் பசங்க என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களை கோகுலும் சிறப்பாக இயக்கியுள்ளார். படக்குழுவினரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர். அடுத்து வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலில் கோகுல் மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளார் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். யார் ஹீரோ, என்ன கதை என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். என்னுடைய தயாரிப்புக் குழுவில் பணி செய்தவர்களுக்கும் நன்றி. இந்த வருடம் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலில் குறைந்தது ஆறு படங்கள் வெளியாகிறது. பிப்ரவரியில் கெளதம் மேனனின் ‘ஜோஷ்வா’ படமும், மார்ச்சில் இருந்து மற்றப் படங்களுக்கு படப்பிடிப்புக்குச் செல்ல இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்”.

நடிகர் ஆர்ஜே பாலாஜி, “இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. ’சவுத் இந்தியன் அமீர்கான்’ என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். படத்திற்கு ஆரம்பத்திலும் முடிவிலும் நல்லதாக எழுதுங்கள் என இமான் அண்ணாச்சி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீடியாவுக்கு அவர்கள் கருத்தை சொல்ல எல்லா சுதந்திரமும் உண்டு. அதேபோல, மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய சிறந்த நடிப்பைக் வெளிக்கொண்டு வந்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும் கொண்டவர். ’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.