Sunday, February 9
Shadow

‘அதோமுகம்’திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : SP Siddarth, Chaitanya Pradap, Arun Pandian, Ananth Nag, Sarithiran, JS Kavi

Directed By : Sunil Dev

Music By : Manikandan Murali and Saran Raghavan

Produced By : Reel Pettai

ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘அதோமுகம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுனில் தேவ்.

இதில் எஸ்.பி சித்தார்த், சைதன்யா பிரதாப், அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின், அருண்பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு:அருண் விஜய்குமார், இசை: மணிகண்டன் முரளி, பின்னணி இசை: சரண் ராகவன், கலை இயக்குனர்:சரவணா அபிராமன், படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்,ஒலி வடிவம்: திலக்ஷன், ஒலி கலவை: டி.உதயகுமார், ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்), பாடல்: சுனில் தேவ், கலரிஸ்ட்: கே.அருண் சங்கமேஸ்வர், இணை தயாரிப்பாளர்கள்: அன்டோ சுஜன் டி.பிரான்சிஸ், வெங்கிமணி, நிர்வாக தயாரிப்பாளர்கள்: எஸ்.கணேஷ்குமார், விக்னேஷ்; ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன்

பள்ளித் தோழி லீனா மகாதேவனை (சைதன்யா பிரதாப்) தேடி கண்டுபிடித்து காதலித்து மணமுடிக்கிறான் மார்ட்டின்( எஸ்.பி சித்தார்த்).அசாமில் வசிக்கும் நண்பன் பால்லுக்கு(அனந்த் நாக்) சொந்தமான 150 ஏக்கரில் ஊட்டியில் உள்ள தேயிலை தோட்டத்தை கவனித்துக் கொள்ளும் தலைமை அதிகாரியாக பணி செய்கிறான் மார்ட்டின். நல்ல வேலை, அன்பான மனைவி, அழகான இயற்கை எழில் சுழ்ந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கின்றனர். பக்கத்து தேயிலை தோட்டத்து அதிபர் ரித்விக் பன்சால் மார்ட்டினின் கடின உழைப்பை பார்த்து தன்னிடம் வேலை செய்ய வருமாறு வற்புறுத்துகிறார். இதனை நிராகரிக்கும் மார்ட்டின் அனாதையான தன்னை சிறு வயதிலிருந்து வளர்த்த நண்பனின் குடும்பத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன் நண்பனுக்கு மட்டும் தான் உயிர் உள்ள வரை வேலை செய்வேன் என்று காட்டமாக சொல்லிவிட்டு வருகிறான். இதனிடையே தங்களின் திருமண நாளில் சர்ப்ரைஸ் பரிசு கொடுக்க மார்ட்டின் முயன்றாலும் லீனா கண்டுபிடித்து விடுவதால், மனைவிக்கு தெரியாமல் புதிதாக பரிசு கொடுக்க வேண்டும் முடிவு செய்கிறான் மார்ட்டின். தன் அலுவலகத்தில் பணி செய்யும் நண்பனின் யோசனைப்படி ஹிட்டன் ஃபேஸ் (Hidden Face App) பார்க்கவும், கேட்கவும் கண்காணிக்கும் செயலியை மனைவிக்கு தெரியாமல் அவருடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தன் மனைவியின் மகிழ்ச்சியான தருணங்களையும், முகபாவங்களையும் படம் எடுத்து வீடியோ தொகுப்பாக்கி கொடுக்க முடிவு செய்கிறான். அந்த செயலியை தன் மனைவி செல்போனில் தெரியாமல் பதிவிறக்கம் செய்து வைத்து விட தன் அலுவலகத்திற்கு சென்றவுடன் மனைவியின் செயல்களை கண்காணிக்க தொடங்குகிறான். அதன் பின் தான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. வீட்டிற்கு ஒரு பரிச்சயமில்லாத நபர் சூர்யா (சரித்திரன்) வருவதும், லீனாவை மிரட்டுவதும், மார்ட்டினை கொலை செய்ய தூண்டுவதையும், அதற்காக திட்டம் போட்டு கொடுப்பதையும் அறிகிறான் மார்ட்டின். அவர்கள் நடவடிக்கைகளை கண்காணித்து பின் தொடர்ந்து போகும்போது மனைவி லீனா சூர்யாவை கொன்று விட அதிர்ச்சியாகிறான். மனைவி தன்னை காப்பாற்றத்தான் இதனை செய்தாள் என்பதை அறிந்து மார்ட்டின் இறந்த சூர்யாவை எஸ்டேட்டில் புதைத்து விடுகிறான். உடனடியாக போலீஸ் மார்ட்டினை தேடி வந்து கொலை குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மனைவி லீனாவை யார் மிரட்டினார்கள்? சூர்யா யார்? மார்ட்டினை இந்த சிக்கலில் மாட்டி விட்டது யார்? மார்ட்டினை வியூகம் அமைத்து போலீசிடம் வசமாக சிக்க வைத்து இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்தது யார்? அப்பாவியான மார்ட்டினின் கடந்த கால நிகழ்வுகளில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என்ன? யார் உண்மையான குற்றவாளி? இத்தனை கேள்விகளுக்கும் இறுதி வரை பரபரப்பாக விடை சொல்லும் கதை தான் அதோமுகம்.

 

அதிர்ந்து பேசாத, அனைத்தையும் நம்பும் அப்பாவி மார்ட்டினாக எஸ்.பி சித்தார்த் அசத்தலான நடிப்பின் மூலம் கவர்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற அமைதியான முகம், காதல் மனைவியை காப்பாற்ற எடுக்கும் முடிவு, தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் நிர்கதியான எதுவும் செய்ய முடியாத அதிர்ச்சியான சூழ்நிலையில் நிலை குலைந்து போகும் போதும், இறுதியில் தன்னை காப்பாற்ற வரும் தருணத்தில் நிமிர்ந்து நிற்கும் நேர் கொண்ட பார்வையில் இயல்பாக செய்துள்ளார். முதல் பாகத்தில் அடக்கி வாசித்திருக்கும் இவரின் அதிரடியான ஆட்டத்தை இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

லீனாவாக சைதன்யா பிரதாப் அவரின் துணைப்பெயர் தான் படத்தின் சஸ்பென்ஸாக வருகிறது. சிரித்தபடியே கணவனை நம்பும்படி செய்வதும், அதற்காக செய்யும் காரியங்கள் எதற்காக என்பது தான் படத்தின் முக்கிய திருப்பங்களை கொடுக்கிறது. படத்தின் முக்கிய தருணங்களை இணைக்கும் புள்ளியாக இறுதியில் காட்டும் முகபாவங்கள், செய்கைகள் படத்திற்கு கூடுதல் சிறப்பு. இப்படி ஆர்ப்பட்டமில்லாத சைலன்ட் வில்லத்தனம் புதுசு, படத்திற்கு ப்ளஸ். மலையாளத்தில் நடித்திருந்தாலும் அறிமுகமாகும் முதல் தமிழ் படத்திலே க்ளாசாக நடித்து கை தட்டல் பெறுகிறார்.

இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகிய சிலர் மட்டுமே நடித்திருந்தாலும் அத்தனை பேரும் படத்தின் விறுவிறுப்பை கூட்டி, அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தக்க வைத்துள்ளனர்.

இறுதியில் சிறப்பு தோற்றமாக அருண்பாண்டியன் காட்டியிருக்கும் என்ட்ரி கொஞ்ச நேரம் என்றாலும் அதிர வைக்கிறார். இரண்டாம் பாகத்தில் இவரின் பங்களிப்பு படம் முழுவதும் தொடரும் என்பதை சூசகமாக சொல்லியிருக்கின்றனர்.

ஆரம்ப காட்சியில் ஃபூல் வியூவில் ஊட்டி, குன்னூர் பகுதிகளின் எழில்மிகு தோற்றத்தையும், அதன் பின் செடிகள் அடர்ந்த வீடு, அலுவலகம், தேயிலை தோட்டம், பாழடைந்த பங்களா, சிறைச்சாலை என்று அத்தனை காட்சிகளையும் தன் கைவண்ணத்தால் அழகாக செதுக்கி கொடுத்துள்ளார் அருண் விஜய்குமார்.

இசை: மணிகண்டன் முரளி, பின்னணி இசை: சரண் ராகவன், பாடல்: சுனில் தேவ் ஆகிய மூவரும் சஸ்பென்ஸ் கலந்த படத்திற்கு அதிர்வை ஏற்படுத்துகின்றனர். வர்றேன்டி என் பொண்டாட்டி பாடல் கவனிக்க வைத்துள்ளார் சுனில் தேவ்.

விஷ்ணு விஜயனின் எடிட்டிங் திறமை, சரவணா அபிராமனின் கலை இயக்கத்துடன், கதையின் ஆழத்தையும் காட்சி முறையையும் ஒன்றிணைத்து படத்தின் அனுபவத்தை உயர்த்துகிறது.

ஒரு மனிதனுக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது. ஒன்று வெளி உலகிற்கு காட்டும் முகம், இன்னொன்று அவனின் உள்மனதில் இருக்கும் மர்மத்தை காட்டும் மறுமுகம். அவை நன்மையா, தீமையா என்பதை அறிந்து கொள்வதில் தான் ஒருவனின் வாழ்க்கையில் வெற்றி இருக்கிறது என்பதைச் சொல்லும் கதைக்களத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுனில் தேவ். ஒருவரை ஒரளவிற்கு நம்பலாம் ஆனால் ஒரேடியாக நம்பக்கூடாது என்பதையும், ஃபிளாஸ்பேக் காட்சிகளை படவரைகலை மூலம் காட்டி ஒவ்வொரு தருணத்தையும் எளிதாக புரிய வைத்திருக்கும் விதமும், வித்தியாசமான கோணத்தில் ஒவ்வொரு சம்பவங்களையும் விவரித்து, சில காட்சிகள் நம்பும்படியாக இல்லாவிட்டாலும், அதை நேர்த்தியாக கையாண்டு சஸ்பென்சை தக்க வைத்து த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்திருப்பதில் வெற்றி பெற்று இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து வெற்றி படத்தை தந்துள்ளார் புதுமுக இயக்குனர் சுனில் தேவ். இவரின் அபரிதமான உழைப்பிற்கும், முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.