‘ஆலகாலம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Jeyakrishna, Chandini, Eshwari Rao, Deepa Sankar, Thangadurai, Scissor Manohar
Directed By : Jayakrishna
Music By : NR Raghunandan
Produced By : Sri Jay Productions – Jeyakrishna
சாராய குடிப்பழக்கத்தால் தன் கணவனை இழக்கிறார் ஈஸ்வரி ராய். எனவே தன் மகனை எந்த குடிப்பழக்கமும் இல்லாமல் நல்லவனாக ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என அரும்பாடு படுகிறார்.. தன் தாயின் ஆசையை நிறைவேற்ற ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜெய் கிருஷ்ணமூர்த்தி.
ஒரு கட்டத்தில் கல்லூரி மேற்படிப்புக்காக நகரத்திற்கு செல்கிறார்.. இவர் அழகில்லை என்றாலும் இவரின் நேர்மை படிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார் நாயகி சாந்தினி. எனவே காதலிக்க தொடங்குகிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்..
தவறான நண்பர்களின் சகவாசத்தால் நீ நிஜமாகவே என்னை காதலிக்கிறாயா.? என நாயகன் கேட்டு விட அதை நிரூபிக்க முத்தம் கொடுக்கிறார் நாயகி.. இதனால் இருவரையும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து விடுகின்றனர்.
இந்த பிரச்சனை சாந்தினியின் குடும்பத்தில் தெரியவர வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியே வந்து காதலுடன் வாழ தொடங்குகிறார்.
இருவரும் திருமணமும் செய்து கொள்கின்றனர். புதுமண தம்பதிகளுக்கு வீடு எடுத்துக் கொடுத்து இவர்களுக்கு உதவி செய்கிறார் தீபா சங்கர்..
படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கட்டிட வேலைக்கு செல்கிறார் நாயகன் ஜெய். அங்கு தங்கதுரையுடன் ஏற்படும் சகவாசத்தால் குடிக்கு அடிமையாகிறார்.
இதன் பிறகு என்ன நடந்தது.? தாயின் ஆசையை நிறைவேற்றினாரா நாயகன்? தாய்க்கு இந்த விவரங்கள் தெரிந்ததா.? குடிகாரன் திருந்தினானா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், ஜெய கிருஷ்ணமூர்த்தி, தங்கதுரை, கோதண்டம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்..
படத்தின் இயக்குனரே நாயகனாக நடித்திருக்கிறார்.. தன் கதைக்கு எந்த நாயகனும் ஒத்து வரவில்லை என்பதால் இவரை களத்தில் இறங்கி விட்டார் போல. காதலில் இவரது நடிப்பில் கவரவில்லை என்றாலும் ஒரு முழு குடிகாரனாகவே நடித்து நம்மை அசத்தி விட்டார் ஜெய் கிருஷ்ணமூர்த்தி.. அதுவும் ஒரு காலை இழந்த பின் இவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது..
கணவனை இழந்த மனைவி குழந்தைக்காக கஷ்டப்படும் அம்மா என இரண்டையும் அழகாக செய்து இருக்கிறார் ஈஸ்வரி.
நாயகன் யார் என்பதை விட தனக்கு என்ன கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதை அழகாக செய்து இருக்கிறார் சாந்தினி தமிழரசன். காதலனை நம்பி பெற்றோரை விட்டு வெளியே ஓடிச் செல்லும் பெண்களுக்கு சாந்தினி கேரக்டர் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்..
குடிகார கணவன் கிடைத்த பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து அவருக்கு உதவும் ஒரு நல்ல சகோதரியாக நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார் தீபா சங்கர்.
ரகு நந்தனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக பாடல் வரிகள் தெளிவாக புரியும் வகையில் இசையை குறைவாக கொடுத்து பாடலை ரசிக்க வைத்திருக்கிறார்.. பின்னணி இசையும் பாராட்டுக்குரியது..
இப்படத்தை ஜெய் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குநர்களாகிய லோகேஷ் கனகராஜ், ‘உறியடி’ விஜயகுமார், கார்த்திக் நரேன் போன்ற இயக்குநர்கள் முத்திரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் இவரும் தற்போது இணைந்துள்ளார்.
இடைவேளைக்கு முன்பு வரை காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை. ஆனால் இரண்டாம் பாதியில் கதை ஓட்டம் சூடு பிடிக்கிறது. தன்னால் முடிந்த அசுர பலத்தை கொடுத்து இருக்கிறார் நாயகன் ஜெய்.
கல்லூரி காலத்தின் போது நாயகனுக்கும் நாயகிக்கும் சுத்தமாக கெமிஸ்ட்ரி இல்லை.. இவரைப் பார்த்து எப்படி நாயகி காதலித்தார்? என்ற கேள்வி நிச்சயம் ரசிகர்கள் மனதில் எழும்.
இரண்டாம் பாதியில் ஒற்றை காலை இழந்த பின் நாயகனின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது.. குடிகாரனாக மாறிய பின் அவர் பிச்சை எடுத்து வெறித்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
கிளைமாக்ஸ் காட்சியில் அம்மா ஈஸ்வரியின் நடிப்பு அபாரம்.. குடிகாரனுக்கு எதிராக அரசுக்கு எதிராக அவர் எடுக்கும் விஸ்வரூபம் நிச்சயம் பேசப்படும்..