‘ராயன்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Dhanush, SJ Surya, Prakash Raj, Selvaraghavan, Sundeep Kishan, Kaalidas Jayaram, Dushara Vijayan, Aparna Balamurali, Varalakshmi Sarathkumar, Diliban, Saravanan
Directed By : Dhanu
Music By : AR Rahman
Produced By : Sun Pictures – M.Kalanithimaran
சிறுவயதில் பெற்றோரை தொலைத்த காத்தவராயன் (தனுஷ்) இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் பிழைப்புக்காக சென்னை வருகிறார். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவுகிறார் சேகர் (செல்வராகவன்). தந்தையாக இருந்து குடும்பத்தை காக்கும் ராயனுக்கு ஃபாஸ்ட் புட் கடைதான் தொழில். தம்பி மாணிக்கம் (காளிதாஸ் ஜெயராம்) கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். மற்றொருவரான முத்து (சந்தீப் கிஷன்) வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு, ஊர் சுற்றுவது அடிதடி என்பதுடன் அண்ணனின் கடைக்கும் அவ்வப்போது உதவிகரமாக இருக்கிறார். மறுபுறம் ராயன் இருக்கும் பகுதியில் உள்ள இரண்டு கேங்க்ஸ்டர்களின் ‘ரவுடி’யிசத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறது காவல் துறை. இதில் ராயன் குடும்பம் சிக்கிக் கொள்ள, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள்தான் திரைக்கதை.
வடசென்னையை மீண்டும் ரத்தக் கறையாக்கும் கதைக்களத்தில் பழக்கப்பட்ட பழிவாங்கல் கதையை உறவுகளுடன் இணைத்து சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர்’ தனுஷ். தம்பி, தங்கைக்காக வாழும் மூத்த அண்ணனின் ‘தியாக’ங்கள் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. அதில் ரவுடியிசத்தையும், துரோகத்தையும், பழிவாங்கலையும் கலந்து வெகுஜன ரசனையில் கொண்டு வந்திருப்பதில் புதிதாக எதுவுமில்லை என்றாலும், அதனை தொடக்கத்தில் தனுஷ் கையாண்ட விதம் கவனிக்க வைக்கிறது.
ப்ளாக் அண்ட் ஒயிட்டில் இருள் சூழ்ந்த ராயனின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு கலரில் மாறுவது உள்ளிட்ட கவனிக்க வைக்கும் உருவகக் காட்சிகள் சிறப்பு. எளிய குடும்பம், அண்ணன் – தங்கை உறவு, அவர்களின் வாழ்க்கைச் சூழல் என தொடக்கத்தில் நேரம் கடத்தினாலும் பொறுமையாக நகர்த்தி போராடிக்காமல் பார்த்துக் கொள்கிறார் தனுஷ். அபர்ணா பாலமுரளிக்கும் – சந்தீப் கிஷனுக்குமான காதல் காட்சியும், ‘வாட்டர் பாக்கெட்’ பாடலின் சூழலும் ரசிக்க வைக்கிறது.
அதேபோல ஆண்களிடையிலான ரவுடியிச கதையில் வெறும் பொம்மையாக இல்லாமல் எதிர்த்து அடிக்கும் துணிவு கொண்ட துஷாரா விஜயன் கதாபாத்திர வடிவமைப்பும், ஒரு கொலைக்குப் பிறகு தனுஷும், துஷாராவும் டீ குடிக்கும் காட்சிக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. படம் மொத்தத்திலும் ராமாயணம் ரெஃபரன்ஸ் அப்பட்டமாக தெரிகிறது. இடைவேளை காட்சி, மருத்துவமனை சண்டைக் காட்சி, இறுதிப் பாடலின் கலர்ஃபுல் நடனம், தனுஷின் என்ட்ரி’க்கள் என திரையரங்க அனுபவத்துக்கான காட்சிகள் அயற்சியிலிருந்து மீட்கிறது.
இதையெல்லாம் கடந்தால், எளிதில் கணிக்கக் கூடிய காட்சிகள் எதிரே நின்று கொண்டு அச்சுறுத்துக்கின்றன. இதுதானே நடக்கப்போகிறது என அசால்டாக இருக்கும்போது அதை இழுத்துக்கொண்டே சென்று சொன்னபடி செய்வது இரண்டாம் பாதியின் தவிர்க்க முடியாத அயற்சி. வெறும் பழிவாங்கல் – ஆக்ஷன் களத்துக்குள் சுருங்கி விடுவதால், உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு அங்கே வேலை இருப்பதில்லை.
’A’ என குறிப்பிட்டிருப்பதால் அதீத வன்முறை என்று சொல்வதில் அர்த்தமில்லை. இருந்தாலும் வன்முறை அதிகம்தான். குறைந்தபட்சம் உணர்வுபூர்வமான எழுத்தின் மூலம் வன்முறைக்கு நியாயம் சேர்த்திருக்க வேண்டும். முக்கியமான கதாபாத்திரம் பாதிப்புக்குள்ளாகும்போதும், அந்தப் பாதிப்பு உணரப்படாததால், யார் செத்தால் என்ன என்ற மனநிலை. அண்ணன் – தங்கை இடையிலான பாசப் பிணைப்பு கூட, தம்பிகளுக்கிடையில் வெளிப்படாதது பலவீனம். மேலும், இடையில் நிகழும் திருப்பத்துக்கு சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
மொட்டைத் தலை, முறுக்கு மீசை, சிரிப்பில்லா சீரியஸான முகம், அளந்து வெளிப்படுத்தும் உணர்ச்சிகளில் வலிகளைக் கடந்த மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு அத்தனை நியாயம் சேர்க்கிறது. யாரையும் பொருட்படுத்தாமல் அடங்காமல் திரிவது, காதலியிடம் ஈகோ இல்லாமல் அறைவாங்குவது என சந்தீப் கிஷன் கவனிக்க வைக்கிறார்.
கடைக்குட்டியாக காளிதாஸ் கொடுத்ததை திறம்பட கையாண்டிருக்கிறார். துஷாராவின் இரண்டாம் பாதி அவதாரம் அதிரடி. மிகவும் நேர்த்தியான முதிர்ச்சியான நடிப்பு செல்வராகவனிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. வழக்கமான மீட்டரிலிருந்து விலகிய நடிப்பில் ஜாலியாக ரசிக்க வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பிரகாஷ் ராஜுக்கு குறைந்த சீன்களே என்றாலும் அனுபவ நடிப்பை பதிய வைக்கிறார். அபர்ணா பாலமுரளி அமைதியான கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்துகிறார்.
‘உசுரே நீ தானே…நீ தானே…’ என ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லும்போது சிலிர்க்கிறது. உண்மையில் தேவையான பரபரப்பையும், எமோஷனையும், வலியையும் கச்சிதமாக கடத்துகிறது ரஹ்மானின் பின்னணி இசை. டார்க் மோடு, ட்ரோன் காட்சிகள், தனுஷின் நிழல் உருவம் பெரிதாகும் இடம் என ஒளிப்பதிவில் அட்டகாசம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். ஜாக்கியின் கலை ஆக்கமும், பிரசன்னாவின் எடிட்டிங்கும் நேர்த்தி.
மொத்தமாக, சமீபகால தமிழ் சினிமாவின் வன்முறை சீசனுக்கு ஏற்ற கேங்க்ஸ்டர் கதையை பெரிய அளவில் புதுமையில்லாமல் சொல்லியிருக்கிறார் தனுஷ். கதையில் கவனம் செலுத்துவதை தாண்டி சில மாஸ் காட்சிகள், திருப்பங்கள் போன்ற அந்த நேரத்து கூஸ்பம்ஸை மனதில் வைத்து உருவாயிருக்கும் படம், ரசிகர்களுக்கு கைகொடுக்கும் அளவுக்கு பொதுப் பார்வையாளர்களுக்கு கைகொடுக்குமா என்பது கேள்வி.