Friday, February 14
Shadow

‘சார்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Vemal, Chaya Devi, Siraj S, Saravanan, Rama, JaiyaBalan, Vijay Murugan, Saravana Sakthi, Brana, Elizabeth

Directed By : Bose Venkat

Music By : Siddhu Kumar

Produced By : SSS Pictures – Siraj S, Nilofer Siraj

1980களில் மாங்கொல்லை கிராமத்தின் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கிறார் பொன்னரசன் (சரணவன்). ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வி கொடுத்தால், அவர்களை ஆதிக்க சாதியின் பிடியிலிருந்து மீட்க முடியும் என்று நம்பிய தன் அப்பா அண்ணாதுரை வாத்தியார் (சந்திரகுமார்) வழி நடக்கிறார். தந்தை, ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கியதை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் அவருக்கு இருக்கிறது. ஆனால், தன் பணிக் காலத்தில் அதை அவரால் நடுநிலைப் பள்ளியாக மட்டுமே மாற்ற முடிகிறது. இந்நிலையில், அதே பள்ளியில் பொன்னரசனின் மகன் சிவஞானம் (விமல்) ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். அப்பாவின் ஆசையை மகன் நிறைவேற்றினாரா, அதற்கு வந்த தடங்கல்கள் என்னென்ன என்பதே இயக்குநர் போஸ் வெங்கட்டின் ‘சார்’ திரைப்படம்.

காதல் காட்சிகள், சேட்டைகள், காமெடி எனத் தொடக்கத்தில் எளிதாக பாஸ் ஆகும் விமல், உளவியல் போராட்டம், ஆக்‌ஷன், ஆக்ரோஷம் எனக் கடினமாகும் இரண்டாம் தாளில் ஜஸ்ட் பாஸ் ஆகவே போராடியிருக்கிறார். படம் முழுவதும் பெரும் நடிப்பையும், அதன் மூலமாகக் கதையில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும் பொன்னரசன் கதாபாத்திரத்தைக் கரைசேர்த்திருக்கிறார் சரவணன். காதல் காட்சிகளில் மட்டும் தலைகாட்டி ‘சம்பிரதாய தேவி’யாகிறார் சாயா தேவி கண்ணன். முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் தயாரிப்பாளரும் அறிமுக நடிகருமான சிராஜ்.எஸ், வில்லனாக எதிர்பார்த்த தாக்கத்தைத் தரவில்லை. அவரைப் போலவே ‘குட்டிப்புலி’ ஷரவண சக்தியும் சிரிக்க வைக்கப் போராடுகிறார். இந்தப் போராட்டங்களுக்கு இடையே வ.ஐ.ச.ஜெயபாலன், ரமா, சந்திரகுமார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

இனியன் ஜெ. ஹரீஷின் ஒளிப்பதிவு, மாங்கொல்லை கிராமத்தின் ஈரத்தையும், பசுமையையும் கடத்தியிருக்கிறது என்றாலும், இரவு நேரக் காட்சிகளில் நேர்த்தியும், தெளிவும் இல்லாமல் போவது படத்திற்கு மைனஸ். கதைக்குள் நுழையவிடாமல் தடுக்கும் முதல் பாதியைக் கருணையின்றி கழற்றிவிடத் தவறுகிறது ஶ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு. ஆத்தங்குடி இளையராஜாவின் இசை, வரிகள் மற்றும் குரலில் ‘அடியே புட்ட வெச்ச ரவிக்கைக்காரி…’ பாடல் சிறிது துள்ள வைக்கிறது. சித்துகுமாரின் இசையில் ‘படிச்சிக்குறோம்’ பாடல் ஓகே ரகம். ஆனால், அவரின் பின்னணி இசை பெரிதாகக் கைகொடுக்கவில்லை. கதைக்களத்தைக் கட்டமைக்க பாரதி புத்தாவின் கலை இயக்கம் பெரிதும் உதவியிருக்கிறது.

மூன்று தலைமுறைகளாக வாத்தியார்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கதைக்கருவாக வைத்து, ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வி கிடைப்பதைத் தடுக்க, மதம், சாதி, கடவுள் போன்றவற்றின் பெயரில் நடக்கும் அநீதிகளைக் கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட். அதற்கு ஏதுவாக, சுகுணா திவாகரின் வசனங்கள் சமூக அநீதியைப் பிரம்பைக் கொண்டு விளாசுகின்றன. ஆனால், மாங்கொல்லை கிராமம், அண்ணாதுரை வாத்தியாரின் தற்போதைய நிலை, பொன்னரசன் வாத்தியாரின் குறிக்கோள், ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறை, ஆணவக் கொலை எனத் தொடக்கத்தில் கதைக்கான முன்னுரை விளக்கப்பட்டு, சிறிது சிறிதாகத் திரைக்கதை விரியத் தொடங்கியவுடன், காதல் காட்சிகள், பாடல்கள், காமெடி காட்சிகள் எனப் பல பென்ச்கள் குறுக்கே வேகத்தடையாகப் போடப்படுகின்றன. ஒரு மணிநேரம் போராடி இவற்றை விலக்கிவிட்டு, படத்தின் கதையைக் கண்டடைவதற்குள் படத்தின் இடைவேளையே வந்துவிடுகிறது.

அண்ணாதுரை வாத்தியாரின் பின்கதை, 60களில் மாங்கொல்லை கிராமம் இருந்த நிலை, சாமியாடல் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள், பொன்னரசன் வாத்தியாருக்கு நேரும் கொடுமை, கதாநாயகன் சிவஞானத்தின் வீழ்ச்சி – எழுச்சி எனப் பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை. குடும்ப நோய், ஊர் சாமியின் சாபம் எனச் சமூகத்தால் கட்டமைக்கப்படுபவைப் பற்றியும், அதற்குப் பின்னான அரசியல் பற்றியும் பேச முயன்ற விதத்தில் கவனிக்க வைக்கிறது படம்.

ஆனால், இப்படி எக்கச்சக்கமான லேயர்களைப் பேசுவதால், எதிலுமே முழுமையும் அழுத்தமும் இல்லாமல் போய்விடுகிறது. சுவாரஸ்யமற்ற திரையாக்கம், மேம்போக்கான காட்சிகள், துணை நடிகர்களின் செயற்கையான நடிப்பு எனப் பிரம்பின் அடிகள், பார்வையாளர்கள் மீதும் சிறிது விழுகின்றன. அதனால், ஒரு சில காட்சிகள் நன்றாகவே எழுதப்பட்டிருந்தாலும், அதற்கு நியாயம் செய்யும் உபகாட்சிகள் மேலோட்டமாகவே ஓடுகின்றன. முக்கியமாக, உளவியல் ரீதியாகக் கதாநாயகன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களும், அதற்கான அவரின் உணர்வுபூர்வமான பதிலடிகளும் உணர்ச்சியற்று நகர்கின்றன.

மொத்தத்தில், ‘சார்’ ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும்.