Friday, December 6
Shadow

‘லைன்மேன்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Jegan Balaji, Saranya Ravichandran, Charli, Adithi Balan

Directed By : M.Udhaykumar

Music By : Deepak Nandhakumar

Produced By : Suriya Narayana

தூத்துக்குடி அருகே உள்ள உப்பள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் லைன்மேன் சுப்பையா (சார்லி). அவர் மகன் செந்தில் (ஜெகன் பாலாஜி). எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் முடித்துள்ள அவர், சூரிய ஒளி மறைந்ததும் தெரு விளக்குத் தானாக எரிவது போலவும் ஒளி வந்ததும் அணைவது போலவும் ஒரு புராஜெக்டை உருவாக்குகிறார். இதை அரசு அங்கீகரித்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்பது அவரது எண்ணம். அதன் அனுமதிக்காக ஆட்சியரைச் சந்திக்கவும் முதல்வரைச் சந்திக்கவும் போராடுகிறார். அவரால் அது முடிந்ததா? அவர் முயற்சி என்ன ஆனது என்பது கதை.

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை, உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இயக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர் உதய்குமார்.

உப்பள வாழ்க்கை, உப்பு வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் வீடுகள், கனவுகள் கொண்ட தோழிகள், தந்தையே தாயுமாக இருக்கும் நாயகனின் வீடு, கண்டுபிடிப்பாளனைப் பைத்தியக்காரன் எனக் கூறும் ஊர், வில்லனத்தனம் கொண்ட பெருமுதலாளி, அவனது கையாள், பேச்சுத் திறனற்ற டீ கடைக்காரர் என தொடரும் ஆரம்ப காட்சிகள் ஒரு நாவலுக்குள் செல்லும் உணர்வை இயல்பாகத் தருகின்றன.

ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தாலும் எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இருப்பதற்காகவே பாராட்டலாம் இயக்குநரையும் அவர் குழுவையும்.

காதல் காட்சிகளைக் கூட கட்டிப்பிடித்தல், டூயட் என்கிற வழக்கத்துக்குள் செல்லாமல் சின்னப் பார்வை அதன் வழி நீளும் ஏக்கம் என அதன் போக்கில் காட்டியிருப்பதும் மிகையற்ற கிளைமாக்ஸும் சிறப்பு. தூத்துக்குடி பேச்சு வழக்கையும் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இரண்டாம் பாதியில், சொல்ல வந்த கதையை விட்டுவிட்டு ஏற்கெனவே பார்த்துப் பழகிய முதலாளி, கந்துவட்டி கொடுமை, பழிவாங்கல், கொலை என திரைக்கதை தடம்மாறுவதால், உப்புக் கல் அதிகமான உணவு போல் ஆகிவிடுகிறது படம். அந்தக் காட்சிகள் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாதது சோகம்.

சிறு பட்ஜெட் படங்களின் செல்ல நட்சத்திரமாகிவிட்ட சார்லி இதிலும் கதையைத் தாங்கிப் பிடிக்கிறார். சுப்பையா என்கிற அந்த லைன்மேன் கதாபாத்திரத்தில், நடிப்பிலும் உடல் மொழியிலும் அசலான கிராமத்துத் தந்தையை கண்முன் நிறுத்துகிறார்.

அறிமுக நாயகன் ஜெகன் பாலாஜி , சோகம் தாங்கிய முகத்துடன் இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்திப் போகிறார். சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், நச்சு ஆலைக்கு எதிராகப் போராடும் தமிழ், ஒரு காட்சிக்கு மட்டும் வரும் அதிதி பாலன் உட்பட துணை கதாபாத்திரங்கள், தேவையான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.

விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவில் உப்பளக் காற்றைக் காட்சிகளில் உணர முடிகிறது. தீபக் நந்தகுமாரின் பாடல்களும் பின்னணியும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. சிவராஜின் படத் தொகுப்பு, இரண்டாம் பாதியை இன்னும் ‘இறுக்கி’ப் பிடித்திருக்கலாம்.