Friday, February 7
Shadow

‘எக்ஸ்ட்ரீம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Rachitha Mahalakshmi, Abi Nakshatra, Rajkumar Nagaraj, Ananth Nag, Amritha Halder, Sivam Dev, Rajeshwari Raji, Saritha

Directed By : Rajavel Krishna

Music By : RS Rajprathap

Produced By : SIEGER Pictures – Kamala Kumari and Rajkumar.N

பிழை என்ற படத்தினை இயக்கிய ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ரச்சிதா, அபி நக்‌ஷத்ரா, ராஜ்குமார் நாகராஜ், ஆனந்த் நாக், அம்ரிதா, சிவம் தேவ், ராஜேஷ்வரி ராஜீ, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜ சேகர், உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் எக்ஸ்ட்ரீம்.

இப்படத்திற்கு பாலா ஒளிப்பதிவு செய்ய ராஜ்பிரதாப் இசையமைத்திருக்கிறார். கமலாகுமாரி, ராஜ்குமார் இருவரும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

கதைக்குள் பயணித்து விடலாம்…

புதிதாக கட்டிடம் கட்டும் இடத்தில் கான்கிரீட் தூணில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்டு, அந்த பெண்ணை கான்கிரீட் கலவையோடு சேர்த்து அதில் வைத்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜ். விசாரணையில் கொல்லப்பட்டது வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான அபிநக்‌ஷத்ரா என்று தெரிய வருகிறது.

தொடர்ந்து இந்த கொலையை செய்தது யார் என்று தெரியாமல் அழைந்து கொண்டிருக்கிறார் ராஜ்குமார். இச்சமயத்தில், அந்த காவல்நிலையத்திற்கு புதிதாக சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார் ரச்சிதா.

அபி நக்‌ஷத்ராவின் கொலை வழக்கை ரச்சிதாவும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் குற்றவாளிகளை இருவரும் கண்டுபிடித்தார்களா இல்லையா.? எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே கதைக்கேற்ற சரியான தேர்வு தான். இன்ஸ்பெக்டராக ராஜ்குமார் நாகராஜ் , சப் இன்ஸ்பெக்டராக ரச்சிதா, பள்ளி மாணவியாக அபி நக்‌ஷத்ரா, இவரின் அம்மாவாக நடித்தவர், என படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

படத்திற்கான மிகப்பெரும் பலம் என்றால் அது கதை மட்டுமே. நிகழ்கால சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், போதை பொருள் பழக்க வழக்கங்கள் என சமூகத்தை சீரழிக்கும் பல விஷயங்களை முன்னிறுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.

கொலை செய்தது யார் என்ற தேடுதல் வேட்டையில் சில குறைகள் எட்டிப் பார்த்தாலும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை ஒரு விழிப்புணர்வாக மக்களிடத்தில் கொண்டு வந்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஒரு சில செயற்கையான காட்சிகளை தவிர்த்திருந்திருக்கலாம்.

மற்றபடி எடுத்த நோக்கத்திற்காக எக்ஸ்ட்ரீம் படக்குழுவினரை வரவேற்கலாம்..