நடிப்பதில் ஆர்வமில்லை; நல்ல இயக்குநராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்
சுந்தரபாண்டியன் படத்திற்காக சிறந்த கதாசரியருக்கான விருது பெற்ற இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசியதாவது :
சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சியே.
சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம் மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே படத்திற்கு கதை அமைத்தேன். பெரும்பாலான மக்கள் பேருந்தில் பயணிப்பத்தால் படத்திலுள்ள பேருந்துப் பயணக் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை எளிதாக கதைக்குள் இழுத்துச் சென்றது.
சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் அவர்களுக்கு இணை இயக்குனராக இருந்தேன். சசிகுமார் சாரும் மிகவும் யதார்த்தமான பாணியில் கதையமைக்கக் கூடியவர். சசிகுமார் சார் “சுந்தர பாண்டியன்”படத்தை தயாரித்து நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார். ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைத்துப் படமும் ஹிட் அடித்து வருகிறது. அதற்கான பிள்ளையார் சுழி “சுந்தர பாண்டியன்” படத்திலிருந்து போடபட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
சசிகுமார் சாரை வைத்து தற்போது முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்து வருகிறேன். இது எனக்கு சசிகுமார் சாருடன் மூன்றாவது படம். இப்படத்தில் பாக்யராஜ் சார் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்து வருகிறார்.
அதற்கடுத்து தான்யா ரவிச்சந்திரனை வைத்து “ரெக்கை முளைத்தேன்” என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். அது ஒரு இளைஞர்களுக்கான கிரைம் த்ரில்லர் படமாக இருக்கும்.
மேலும், ரூரல் பொலிட்டிகல் கிரைம் கதையாக “கொலைகார கைரேகைகள்”என்ற இணையத் தொடரை ஜீ5 நிறுவனத்திற்காக இயக்கி வருகிறேன். இதில் கலையரசன், வாணி போஜன் நடித்து வருகின்றனர்.
ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வதற்கு வியாபாரம் தான் காரணம். ஆனால், ஓடிடி மற்றும் திரையரங்கு இரண்டு பார்வையாளர்களும் ஒரே மாதிரி உள்ளார்கள். டெக்னலாஜி ரசிகர்களின் கையில் வந்து விட்டது, ஓடிடியில் தான் பெரும்பாலான மக்கள் தற்போது படங்களை பார்த்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே திரையரங்கு என்றிருக்கிறது. இரண்டையும் ஆரோக்கியமான விஷயமாகத் தான் பார்க்கிறேன்.
தெலுங்கு சினிமாத் துறையில் நடிகர் நடிகைகளின் அசிஸ்டண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களே சம்பளம் தர வேண்டும் என்ற தீர்மானம் சரியானதும் வரவேற்கத்தக்கதும் கூட. தமிழ் சினிமாவில் இதைப் பற்றி அனைத்து தயாரிப்பாளர்களின் மனதில் எண்ணம் இருந்தாலும், இந்த பேச்சை முதலில் யார் எடுப்பது என்ற தயக்கம் தான்.
ஏனென்றால், நடிகர்களுக்கே அவர்களின் அசிஸ்டண்டுகளை பற்றி முழுமையாக தெரியாது. அவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். நாள் ஒன்றிற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு படத்திற்கு 25 லட்சம் வரை அவர்களுக்கு மட்டுமே சம்பளத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இது பல நடிகர்களுக்கு தெரியாது. இது பற்றி நடிகர்களிடம் நம்மால் கேட்கவும் முடியாது. மேலும், நடிகர்களுக்கு சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதியாக இருக்கிறது.
இதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் இயக்குனருக்கு குறைந்த செலவில் படம் எடுக்கும் வேண்டும் என்ற அழுத்தம் வராது. கிரியேட்டருக்கு படத்திற்காக பட்ஜெட் அதிகம் கிடைத்து படம் மேலும் சிறப்பாக வரும்.
சுந்தர பாண்டியன் படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்தார்கள். அதில் நடிகர் யாஷ் நடித்திருந்தார். இது கதிர்வேலன் காதல் படம் தெலுங்கில் நேரடியாக டப்பிங் செய்யப்பட்டது. இப்படி என் படங்கள் வேறு மொழிகளின் ரீ-மேக் செய்யப்படுவதும் டப் செய்யபடுவதும் தொடர்கிறது, எனவே விரைவில் நேரயடியாக தெலுங்கில் படம் இயக்குகிறேன்.
கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தில் நான் பர்ஸ்ட் காபி தயாரிப்பாளராக இருந்தேன். அந்த அனுபவத்தில் “ரெக்கை முளைத்தேன்” எனும் திரைப்படத்தை நானே தயாரிக்கிறேன். தொடர்ந்து நல்ல கதைகளை கொண்டு வரும் இளம் இயக்குநர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது.
நடிப்பதற்க்கு நண்பர்கள் பலரும் என்னை அழைக்கிறார்கள், ஆனால், எனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் இல்லை. இயக்குனராக நல்ல கதைகளை வழங்கவேண்டும் என்று மட்டும் தான் எண்ணம் இருக்கிறது.
இவ்வாறு இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசினார்.