Monday, September 9
Shadow

“ஆதார்” திரைபட ரேட்டிங்: 3/5

சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்த பச்சமுத்து ( கருணாஸ் ) கட்டிடத் தொழிலாளியாக தனது மனைவி துளசியுடன் ( ரித்விகா ) வேலை பார்த்து வருகிறார். துளசிக்கு பிரசவவலி ஏற்பட்டதால் இரவு நேரத்தில் ஆட்டோ தேடி ஒரு வீட்டின் கதவை தட்டும் போது சரோஜா வெளியே வர பத்தமுத்து அதிர்ச்சியாகி, தன் மனைவி துளசி பிரசவவலியால் துடிப்பதை காண்பித்து கெஞ்ச துளசி ஆட்டோவில் இருவரையும் ஏற்றிச் செல்கிறாள். இங்கே ஒரு Flash Cut … பச்சமுத்து வேலை பார்க்கும் கட்டிடத்தில் ஒரு நாள் இரவு நேரத்தில் சரோஜா தனது கூட்டத்துடன் வந்து கம்பிகளை திருடும் போது பச்சமுத்து அவளை பிடித்து கொடுக்கிறார்.

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைபேறுக்காக அனுமதிக்கப் படுகிறார். அங்கு பெண்கள் வார்டு என்பதால் துளசிக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் சரோஜா ( இனியா ). இந்நிலையில் தான் வேலை பார்க்கும் கட்டத்திற்கு சென்று சம்பளத்தை வாங்கிக் கொண்டு பச்சமுத்து மருத்துவமணைக்கு வந்து பார்க்கும் போது தன்னுடைய மனைவி துளசியை காணவில்லை. அப்போது மருத்துவமனையின் பின்புறம் கழிவுநீர் தொட்டியிலிருந்து சரோஜாவின் சடலம் எடுக்கப்படுகிறது. இதனைப் பார்த்ததும் பச்சமுத்து அதிர்ச்சி ஆகிறார்.

இதனைத் தொடர்ந்து தனது குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையம் சென்று தன் மனைவி துளசியை கண்டுபிடித்துத் தருமாறு புகார் கொடுக்கிறார். அப்போது புகாரை பதிவு செய்யும் காவலர் கல்யான போட்டோ ஏதாவது இருக்கிறதா? என கேட்க, உடனே பச்சமுத்து துளசியின் ஆதார் அட்டையை கொடுக்க அதை தனது போனில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் அந்த காவலர். காணாமல் போன துளசி என்ன ஆனார்? சரோஜாவின் இறப்புக்கு என்ன காரணம்? பச்சமுத்து வின் வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை….

 


பச்சமுத்தாக நடித்துள்ள கருணாஸ் கைக்கழந்தையோடு தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் பரிதவிப்பது, குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தன் மனைவி துளசியை நினைத்து ஏங்குவது, காவல் ஆய்வாளர் வழக்கை ஒத்தி வைத்து விரட்டும் போது ஐயா எப்படியாவது என் மனைவியை கண்டுபிடித்து தாருங்கள் என கதறி அழுவது, அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராட முடியாமல் தன் இயலாமையை நினைத்து கண்ணீர் சிந்துவது என காட்களுக்கு தகுந்தவாறு தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாஸ்.

மோசமான பெண்ணாக சமூக்கத்தால் பார்க்கப்படும் சரோஜா, ஒரு பெண் பிரசவவலியால் துடிக்கும் போது, தன்னை காட்டிக் கொடுத்தவரை பழிவாங்க நினைக்காமல், பச்சமுத்துக்கு உதவுவது கல்லுக்குள்ளும் ஈரம் இருப்பதை இயக்குனர் இனியா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதேபோல் தனது கணவரை எதிர்பார்த்து குழந்தையுடன் இருக்கும் உயர் அதிகாரியின் உத்தரவால் ரித்விகா கொலை செய்யப்படுகிறார். இதை அதிகாரமும், பணமும் இருப்பதால் உன்மையை மறைத்து உன் மனைவி ஆட்டோ டிரைவருடன் ஓடிப்போய் விட்டார் என பச்சமுத்துவிடம் எழுதி வாங்கும் போது சட்டம் சாமானியருக்கு உதவாது என்பதையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

படம் பார்க்கும் போது ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாதவாறு, எதிர்பார்ப்புடன் இருக்கையின் நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதிகாரமும் பணமும் இருந்தால் நீதியைக்கூட விலைக்கு வாங்கிவிடலாம் என்ற இன்றைய காலகட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது இந்த ஆதார் திரைக்கதை.

படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள உமா ரியாஸ், காவல் ஆய்வாளராக நடித்துள்ள பாகுபலி பிரபாகர் ( விஜயன் ), முதல் நிலை காவலராக நடித்துள்ள அருண் பாண்டியன் என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை போட்டி போட்டு செய்து முடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். கருணாஸ், அருண் பாண்டியன் இருவரும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தவர்கள், இனி குணச்சித்திர நடிகராக கருணாஸை பாராட்டுவார்கள்.

மொத்தத்தில் ஆதார் திரைப்படம் சமூகத்தில் நடைபெற்ற சம்பவங்களை பிரதிபலிக்கிறது.