Saturday, October 12
Shadow

‘ஷூ’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

நடிகர்: திலீபன், யோகி பாபு நடிகை: ப்ரியா கல்யாண் டைரக்ஷன்: கல்யாண் இசை: சாம் சி.எஸ்.சின் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்காக விற்கும் கும்பலை கருவாக கொண்ட படம்.

டைம் ட்ராவலர் ஷீ-வைக் கண்டுபிடிக்கும் இளைஞர், பாலியல் வன்முறைக்கு தள்ளப்படும் சிறுமி, தாதாவாக உருவாக நினைக்கும் ஒருவன். இவர்கள் மூவரும் சந்திக்கும் புள்ளியே ஷூ படத்தின் கதை.

 

 

 

நாயகன் திலீபன் டைம் ட்ராவலர் மிஷின் பொருத்திய ஷூ ஒன்றை தயாரிக்கிறார். அதை சோதித்துப் பார்க்கும் முயற்சியில் காவலர்களிடம் மாட்டிக்கொள்கிறார். இதற்கிடையே, அந்த ஷூவை ஓரிடத்தில் ஒளித்து வைக்கிறார் திலீபன். அந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளியான அந்தோணி தாசனின் மகளாக வரும் ப்ரியாவிடம் சிக்குகிறது. அங்கிருந்து, யோகிபாபுவின் கைக்கு செல்கிறது. மறுபுறம் ஒரு கும்பல், சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைக்கிறது. அந்த கும்பலிடம் விற்கப்படுகிறார் சிறுமி ப்ரியா. ஷூ-வுடன் தொடர்புடைய இந்த மூன்று பேரும் சந்திக்கும் புள்ளிதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் சிறுமி ப்ரியாவை மையமிட்டே நகர்கிறது. குடிகார தந்தையை அன்பாகவும் அக்கறையாகவும் பார்க்கும் சிறுமி, இறந்துபோன தாயை நினைத்து ஏங்கி நிற்கிறார். அவரின் நடிப்பு அத்தனை அற்புதம். யோகி பாபு, ரெடின் கிங்சிலே, விஜய் டிவி பாலா ஆகியோர் வரும் காட்சிகளில் காமெடிக்கு பஞ்சமில்லை. திலீபன் கதாபாத்திரம் வலுவாக இல்லாமல் இருந்தாலும், வரும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். அம்மா தவிப்பால் ஏங்கும் சிறுமியின் ஏக்கத்திற்கு ஏற்ற பின்னணி இசையும், அம்மா பாடலும் மனதை பிசைந்துவிட்டது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேர படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்வதற்கு உதவியிருக்கிறது.

டைம் ட்ராவலர் படங்களில் இருக்கும் அறிவியல் விளக்கங்கள் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், அனைவராலும் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும். படத்தின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஷூ தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றாலும், குறைந்த நேரம் மட்டுமே ஷூ-வை காட்டுவது கொஞ்சம் ஏமாற்றமே.

படத்தின் பெரிய பலவீனம் நாடகத்தனமான பாத்திர படைப்பு. சிறுமி குறித்த சித்தரிப்பு ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்டவைக்கிறது. சிறுமிகளை ஓலமிட வைத்து செயற்கையான அனுதாபத்தை படத்தின் மேல் உருவாக்குகிறார் இயக்குநர் கல்யாண்.

ஷூ ஒரு சிறுமியின் ஏக்கத்தை, பரிதவிப்பை, அறிவுக்கூர்மையை, பாசப் போராட்டத்தை அழுத்தமாகப் பதிவு செய்வதால், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இது இருக்கும்.