Monday, October 14
Shadow

‘சஞ்ஜீவன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

நடிகர்: வினோத் லோகிதாஸ் நடிகை: திவ்யா டைரக்ஷன்: மணி சேகர் இசை: தனுஷ் மேனன் ஒளிப்பதிவு : கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஸ்னூக்கர் விளையாட்டும், நண்பர்கள் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும் கதை.

சென்னையை சேர்ந்த ஐந்து இளைஞர்கள். அதிலொருவர் தொழிலதிபரின் மகன். அவருடைய அப்பாவின் அலுவலகத்தில் மற்ற நான்கு நண்பர்களும் வேலை பார்க்கின்றனர். அதில் ஒருவர் நாயகன் வினோத் லோகிதாஸ். ஸ்நூக்கர் சாம்பியனான இவர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்லலாம் என முடிவெடுப்பார்கள். இதற்கிடையே நாயகன் காதல் வயப்படுவார்.

சுற்றுலா செல்லும் நண்பர்கள் வழக்கம் போல் குடி, கொண்டாட்டம், சேசிங் என அதகளமாக செல்வார்கள். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தொன்று நடக்கின்றது. அவர்கள் விபத்திலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

மிக எளிமையான கதையை நல்ல திரைக்கதையாக மாற்றி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மணி சேகர். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை எளிமையாகவும் ரசிக்கும்படியும் செதுக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பது கூடுதல் தகவல். அதேபோல், ஸ்நூக்கர் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம்.

வினோத் லோகிதாஸ், யாசின், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா ஆகிய ஐந்து பேரும் ஒவ்வொரு விதம். அவரவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல், தங்களது உடல் மொழியை வெளிப்படுத்தி உள்ளனர். காதலுக்காக உருகும் ஷிவ் நிஷாந்த் செய்யும் காமெடிகள் அட்டகாசம். நாயகியாக வரும் திவ்யா துரைசாமியின் நடிப்பில் அப்படியொரு துள்ளல். இருப்பினும் அவருக்கான கதாபாத்திரம் வலுவாக இல்லை.

ஷிவ் நிஷாந்தின் காதலி பற்றிய காட்சிகள், யாசினும், ஷிவ் நிஷாந்த்தும் போதை மருந்து கடத்தும் காட்சிகளில் அரங்கில் அப்படியொரு ஒரு சிரிப்பலை.

கார்த்திக் சுவர்ண குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது. ஸ்நூக்கர் விளையாட்டை மிரட்டலாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஜ் மேனனின் இசையும் அதற்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

முதல் பாதியில் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை நேரில் பார்ப்பது போல் இயக்கியிருந்தாலும், இரண்டாம் பாதியில் காதல், இரட்டை அர்த்த வசனம் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். படத்தின் இறுதிக் காட்சியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் முழுவதும் நிரம்பியிருக்கும் காமெடியே சஞ்சீவனை தாங்கிப்பிடிக்கிறது. சஞ்சீவன் இளைஞர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.