Saturday, October 5
Shadow

காமெடி நடிகர் யோகிபாபு “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில்வித்தியாசமான வேடத்தில் கலக்கியுள்ளார் !

பல மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் பங்கேற்பதும், எல்லா வகையான உணர்வுகளை முகத்தில் கொண்டுவரும் திறமையும், ஒவ்வொரு நடிகருக்கும் இருக்க வேண்டிய பொதுப்பண்பு ஆகும். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில், கொடிகட்டி பறந்து வரும் நடிகர் யோகிபாபு, வித்தியாசமான கதாப்பாத்திரங்களிலும் தற்போது பெரும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். விரைவில் வெளிவரவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில், வித்தியாசமான வேடத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்திய மரபில் கூறப்படும், மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது கதைகள் இணைந்த ஆந்தாலஜி திரைப்படமாக “நவரசா” உருவாகியுள்ளது.

காமெடி நடிப்பு மற்றும் தற்போதைய குணச்சித்திர பாத்திரங்கள் குறித்து நடிகர் யோகிபாபு கூறியதாவது…

சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாப்பாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். நகைச்சுவையில் சாதனை படைத்த , தமிழ்சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனைதை கவர்ந்துள்ளனர். “ஒண்ணா இருக்க கத்துக்கணும்” படத்தில் கவுண்டமணி அவர்களும், “நீர்க்குமிழி” படத்தில் நாகேஷ் அவர்களும் நகைச்சுவைக்கு எதிரான குணச்சித்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. அதே போல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். “நவரசா” ஆந்தாலஜி திரைப்படமே, மனிதனின் உணர்வுகளை மையப்படுத்தி ஒன்பது கதைகளை சொல்லும் திரைப்படம். அப்படியான ஒரு படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி, நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. மேலும் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, “நவரசா” உருவாகியுள்ளது. Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். “நவரசா” வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக Netflix தளத்தில் வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.