தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 53.
இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இர்பான் கான். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். சில நாள்களுக்கு முன்பு இர்பான் கானின் தாய் காலமனார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இர்பான் கான் நேற்று காலமானார்.
இர்பான் கானின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.