Monday, September 9
Shadow

கொரோனாவை எதிர்கொள்வோம் – மோடி பேச்சு

கொரோனா தாக்குதலை எதிர்கொள்வதற்காக அவசரகால நிதியை சார்க் நாடுகள் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சார்பில் 74 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வதற்கான கூட்டு உத்தியை வகுக்க, சார்க் நாடுகள் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்த பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் இந்த ஆலோசனையில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய அனைத்து தலைவர்களும், பிரதமர் மோடியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 


அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை எதிர்கொள்ள அச்சம் தவிர்த்து, தயாராவோம் என்பதே இந்தியாவின் முழக்கமாக இருப்பதாக தெரிவித்தார். சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, கொரோனாவை வெல்ல வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் கொரோனாவை எதிர்கொள்ள அவசரகால நிதியை உருவாக்க வேண்டியது அவசியம் என தெரிவித்த பிரதமர் மோடி, இதற்கு தொடக்க நிதியாக 74 கோடி ரூபாயை அளித்து இந்தியா இதனை தொடங்கி வைப்பதாகவும் தெரிவித்தார்.

சார்க் நாடுகள் ஒன்றிணைந்து தெற்காசிய நாடுகளில் தொற்று நோய்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதனை இந்தியா ஒருங்கிணைக்கும் என்றும் பிரதமர் கூறினார்