வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை உலகமெங்கும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இது வரை 370 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் கொரோனா விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகரான ‘பாகுபலி’ பட நாயகன் பிரபாஸ் வெளிநாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ளதால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நான் பாதுகாப்பாக திரும்பியுள்ளேன். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளேன். நீங்களும் கொரோனாவில் இருந்து உங்களை காத்துக்கொள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.