Wednesday, July 24
Shadow

தாராள பிரபு

சென்னையில் கருத்தரிப்பு மையம் நடத்துபவர் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). குழந்தையின்மை பிரச்சினைக்காக பல தம்பதியர் அவரிடம் வருகின்றனர். ஆரோக்கியமான விந்தணு வழங்கும் கொடையாளர் கிடைக்காமல் தவிக்கும் அவர், இறுதியில் கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவை (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார். அவரை மெல்ல நெருங்கி, விந்து தானம் பற்றி எடுத்துக் கூறுகிறார். முதலில் தலைதெறிக்க ஓடும் பிரபு, பின்னர் சம்மதிக்கிறார். இதற்கிடையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுவுக்கு காதல் ஏற்படுகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடக்கிறது. ஆனால், மனத்தடை காரணமாக, தான் விந்தணு கொடையாளர் என்பதை நிதியிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபு எதிர் கொள்ளும் ஒரு பிரச்சினை, அவரது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது, அதில் இருந்து மீண்டாரா, இல்லையா என்பது கதை.

புதுப்புது கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப முன்னேற்றம் என அறிவியல் வளர்ச்சி வேகமாக நடக்கும் காலம் இது. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்பதை சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.

கடந்த 2012-ல் வந்த ‘விக்கி டோனர்’ என்ற இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்துள்ள இயக்குநர், அதை தமிழுக்கு ஏற்ப தருவதில் வெற்றி பெறுகிறார். கொஞ்சம் பிசகினாலும் பார்வையாளர்கள் முகம்சுளிக்க வாய்ப்பு உள்ள கதையோட்டத்தைக் கொண்டிருந்தாலும், அவ்வாறு உணரமுடியாத வகையில் ஜாலம் நிகழ்த்துகிறது திரைக்கதை.

திரைக்கதையின் மற்றொரு சிறப்பான அம்சம், விந்து தானம் என்ற ஒற்றை இழையுடன் நின்றுவிடாமல், மறுமணம், தத்தெடுப்பு ஆகிய மேலும் இரு முக்கிய இழைகளை தொடர்புபடுத்தி, இயல்பான கதையோட்டத்தில் அவற்றை சிறப்பாக சேர்த்த விதம், உணர்ச்சிகரமான விருந்தாக நிறைவு தருகிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் டாக்டர் கண்ணதாசனாக வரும் விவேக். நகைச்சுவை, நக்கலடிப்பது, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் மிகையின்றி நடிப்பது என திறமையை வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். நாயகன் – நாயகி இருவரது குடும்ப உறுப்பினர்களின் குணநலன்களை முழுமையாக சித்தரித்துள்ளார் இயக்குநர். இதன்மூலம், குடும்ப வாரிசுகளின் திருமணம் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதன் பயனாக கிடைக்கப்போகும் குடும்ப வாரிசின் அவசியத்தையும், அது தரப்போகும் உன்னத உணர்வு நிலையையும் அழுத்தமாக நிறுவியிருக்கிறார். நாயகனின் அம்மாவை சற்று பிற்போக்கானவராகவும், பாட்டியை நவீன சிந்தனை கொண்டவராகவும் காட்டியிருப்பது சுவாரஸ்ய பார்வை.

ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்தாட்ட வீரராகவும், காதலும் திருமணமும் உருட்டி விளையாடும் ஒரு பாரம்பரியம் பேணும் குடும்பத்துப் பையனாகவும் பல பரிமாணங்களில் தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார் கதாநாயகி தான்யா ஹோப். அழகான கதாநாயகிகளுக்கு நடிக்க வராது என்பதை உடைத்தெறிந்திருக்கிறார். ஆர்.எஸ்.சிவாஜியின் நகைச்சுவையை கடைசிவரை ரசிக்கமுடிகிறது. உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என கேட்கும் இடம், நகைச்சுவையில் எழுதப்பட்ட ரகளையான திரைக்கதைத் திருப்பம்.

அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள் தந்திருக்கும் பாடல்கள், உணர்வுகளின் ஊர்வலமாக நகரும் படத்துக்கு மாபெரும் பலம். மனித உறவுகளை முன்னிறுத்தி, அறிவியல் நவீனத்தின் சாதக அம்சங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தந்திருக்கும் இந்த திரைப்படத்தை தாராளமாக பாராட்டலாம்!