Sunday, June 4
Shadow

கூலி தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகை வாங்க கூடாது

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை வாங்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இடம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்திற்கான வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும் வீட்டு உரிமையாளர்கள் தம்மிடம் வாடகைக்கு இருக்கும் தொழிலாளர்களையும் மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் இந்த உத்தரவுகளை மீறினால் அவர்கள் மீது மாநில அரசுகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஊரடங்கை காரணம் காட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் நிர்வாகங்கள் எவ்வித பிடித்தமும் செய்யாமல் அப்படியே வழங்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு உணவு, இருப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் தத்தமது சொந்த ஊருக்கு திரும்பியிருப்பின் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.