விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். மனு ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். அஸ்வத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஷ்ணு விஷால் கெமிக்கல் எஞ்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். பல இடங்களில் வேலை தேடியும், படித்ததற்கான பணி அவருக்கு கிடைக்கவில்லை.
இன்னொருபுறம் அபு பக்கர் என்னும் தீவிரவாதியை தேசிய புலனாய்வு நிறுவனம் தேடி வருகிறது. இந்நிலையில் தனது கம்பெனி வேலையாக ஐதராபாத் சென்று வந்த விஷ்ணு விஷாலை போலீசார் கைது செய்கின்றனர். சாட்சிகளும் தடயங்களும் இவருக்கு எதிராக இருக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் என்று முத்திரைக் குத்தப்படுகிறார் விஷ்ணு விஷால்.
இறுதியில் போலீஸ் பிடியில் இருந்து விஷ்ணு விஷால் தப்பித்தாரா? உண்மையான தீவிரவாதி அபு பக்கர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
இர்பான் அகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால் ராட்சசன் படத்திற்கு பிறகு சரியான கதைத் தேர்வை செய்து நடித்திருக்கிறார். முஸ்லீம் இளைஞராக தன்னை அப்படியே மாற்றிக்கொண்டுள்ளார்.
தேசிய புலனாய்வு அதிகாரியாக வரும் கௌதம் மேனன் விஷ்ணு விஷாலுக்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ரைசா வில்சன், ரெபா மோனிகாஜான் மற்றும் வக்கீலாக வரும் மஞ்சிமா மோகன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக செல்கிறது. முஸ்லிம் மதத்தினரை சேர்ந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்ற கருத்தை இந்த படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.
அஸ்வத்தின் பின்னணி இசை மற்றும் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் தந்துள்ளது.