பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடுகிறார் ஜி.வி.பிரகாஷ். டிஜிட்டல் உலகில் இது புது முயற்சி. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. 6 பாடல்களை அவர் ஏலம் விடுகிறார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்துள்ளார்.
டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் என்எஃப்டி பற்றி புரிந்துகொண்டால் ஜிவி பிரகாஷின் முயற்சியும் புரியும்.
இதன் பின்னணியில் இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, என்எஃப்டி போன்றவை செயல்படுகிறது. பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடுகிறது. ஆனால், பிட்காயினைவிட என்எஃப்டி சற்றே வித்தியாசமானது.
ஒவ்வொரு என்எஃப்டிக்கும் ஒரு மதிப்பு. ஒரு பிட்காயினைக் கொடுத்து இன்னொரு பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு என்எஃப்டியைக் கொடுத்து இன்னொரு என்எஃப்டி வாங்க முடியாது.
என்எஃப்டி முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இப்படித்தான் என்எஃப்டி நடைமுறைக்கு வந்தது. பூனையில் ஆரம்பித்தது தற்போது மெய்நிகர் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து இருக்கிறது. தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறிவிடும் அளவுக்கு மெய்நிகர் உலகில் (virtual reality) நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது.
இதைத்தான் இப்போது ஜிவி பிரகாஷ் முயற்சித்திருக்கிறார். மெய்நிகர் உலகில் தனது படைப்புகளை அவர் ஏலம் விடுகிறார்.