ரேணிகுண்டா’ படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில், மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’.
காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் – மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதலர்களின் பார்வையிலிருந்து விலகி, காதலால் இரு குடும்பத்தினர் படும் துயரங்களை வலி மிகுந்த வார்த்தைகளிலும் மனதை உருக்கும் இசையிலும் தந்திருக்கிறது இந்தப்பாடல். “காதலும் சாவோடும் முடிவதில்லை..” எனும் அழுத்தம் மிகுந்த வரிகள் தமிழ் சினிமாவின் சொல்லப்படாத பக்கத்தை பேசும் விதமாக அமைந்துள்ளது. பாடலின் காட்சி அமைப்பில், புதுமுக ஹீரோ அருண் பன்னீர்செல்வம் நடிக்க அவரது பெற்றோர்களாக இளங்கோ, கவுசல்யா மற்றும், ஹீரோயின் வித்யா பிள்ளை பெற்றோர்களாக புதுமுகம் தெய்வேந்திரன், நிமிஷா போன்றோர்கள் நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையில், விஜய் சூப்பர் சிங்கர் புகழ் முத்து சிற்பி கிராமத்து மணம் வீசும் குரலில் இப்பாடலை பாடியுள்ளார். வெளியான நொடியில் இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை இப்பாடல் பெற்றுள்ளது. “வீணானதே தாய் தந்த பாலும்.. ” போன்ற வரிகளால் அர்த்தமுள்ளப் பாட்டாக படைத்திருந்தார் கவிஞர் யுகபாரதி.
அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை ,ஹர்ஷ் லல்வானி.ஜி, சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் ,நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் அனைவரையும் கவனிக்க வைக்கும் படமாக உருவாகியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா . இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் .இசை -கணேஷ் ராகவேந்திரா. இவர், ஏற்கெனவே ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்தவர். எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம். கலை – முகமது.சண்டைப்பயிற்சி -தினேஷ். இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர். நடனம் – தஸ்தா.