தஞ்சைப் பெரிய கோயிலை இழிவுபடுத்தும்படி நடிகை ஜோதிகா பேசியதாக, கடந்த இரண்டு நாள்களாக அவர் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
`ஜோதிகாவுக்கு தமிழ் கலாசாரம் பற்றி என்ன தெரியும்? அவருக்கு உதாரணம் கூறுவதற்குக் கோயில்தான் கிடைத்ததா வேறு எதுவுமே இல்லையா, தஞ்சைப் பெரிய கோயிலை இழிவுபடுத்திவிட்டார்’ இவை அனைத்தும் கடந்த சில நாள்களாக ஜோதிகாவை விமர்சித்து சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டு வரும் கருத்துகள். நெட்டிசன்கள் திடீரென ஜோதிகாவை விமர்சிப்பதற்கு அவர் ஒரு விருது விழாவில் பேசியதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக நடந்த பெண்களுக்கான ஒரு விருது வழங்கும் விழா கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதற்குப் பிறகுதான் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. அந்த விருது விழாவில், “தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன் மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள்.
மறுநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது, நான் கண்டதை வாயால் கூற முடியாது, அவ்வளவு மோசமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். மருத்துவமனையில் நான் அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிக முக்கியம் தயவுசெய்து அவற்றுக்கு நிதியுதவி கொடுங்கள்” எனப் பேசியுள்ளார். இதற்குத்தான் பலரும் ஜோதிகாவை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்களையும் ஜோதிகா எதற்கு அப்படிப் பேசினார் என்பதையும் இயக்குநர் சரவணன் ராமசாமி தன் ட்விட்டரில் விளக்கியுள்ளார். “ஜோதிகா – சசிகுமாரை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறேன், அப்போதுதான் ஜோதிகா தஞ்சை, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு பிறந்த குழந்தை கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். குழந்தை பிறந்த வடு மறையாத ஒரு தாய் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்ததைப் பார்த்து கண் கலங்கினார்.
![](https://bakkiyamcinematv.com/wp-content/uploads/2020/04/IMG_20190626_123956.jpg)
உலகப் புகழ்பெற்ற தஞ்சை கோயிலுக்கு எதிரே இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க இந்தக் காட்சிதான் காரணம். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற போர்வை எங்கே உள்ளது?
சில வருடங்களுக்கு முன்பு `கோயில் கட்டுவதைவிட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ என பிரதமர் மோடி பேசியிருந்தார். அவர் கோயிலை அவமானப்படுத்திவிட்டார் எனக் கூற முடியுமா? ஜோதிகாவுக்கு தஞ்சைப் பெரிய கோயில் மீது எவ்வளவு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று எங்கள் யூனிட்டுக்கே தெரியும். இந்தப் பரபரப்பு பின்னணியில் என் பங்கும் இருப்பதால்தான் இந்த விளக்கம்” என்று இன்னும் பல கருத்துகளையும் விளக்கங்களையும் பதிவிட்டுள்ளார் இயக்குநர்.