Tuesday, December 3
Shadow

கடைசி விவசாயி திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு கிராமத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு குல தெய்வத்திற்கு திருவிழா நடத்த கிராம மக்கள் சார்பாக முடிவு செய்யப்படுகிறது. அதற்கு முதல் நெல்லை விளைவித்துத் தரும் பொறுப்பு மூத்த விவசாயி மாயாண்டிக்கு கொடுக்கப்படுகிறது. அப்போது அந்த விவசாயியின் தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடக்கின்றன. இறந்து போன மயில்களை எடுத்து புதைக்கிறார். ஆனால் மயில்களை கொன்று புதைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதன் பிறகு அவர் சிறையில் இருந்து வெளிவந்தாரா? ஊர் திருவிழா நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

மாயாண்டி என்ற வயதான விவசாயியாக நல்லாண்டி நடித்துள்ளார். இந்தப் படத்தில் தெரிந்த முகம் என்றால் அது விஜய் சேதுபதியும் யோகிபாபுவும் தான். விஜய் சேதுபதியின் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு கவனம் ஈர்க்கிறது.

யோகிபாபு தன் விவசாய நிலத்தை விற்று யானை வாங்கி பிழைக்கிறார். அவர் யானை வளர்க்கும் காட்சிகளும் வெகுவாய் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் இருக்கும் முக்கியமான ஒரே பெண் கதாபாத்திரம் நீதிபதி. பெண் நீதிபதியாக ரெய்ச்சல் ரெபேகா நடித்துள்ளார். ஒரு வழக்கை மனிதாபிமானம் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வியலோடு அணுகும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

சிறிய கதையாக இருந்தாலும் அதனை தன்னுடைய திரைக்கதையின் மூலம் அனைவரையும் கவரும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிகண்டன். சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இருவரது இசையும் தேவையான இடங்களில் மட்டும் ஒலிக்கிறது.