தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அரசின் சார்பில் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் நிர்வாக பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதோடு அவருக்கு உதவியாக தமிழக அரசால் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அதில் மூத்த பல தயாரிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் திடீரென கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டு கேட்கும் பணிகள் அனைத்தும் முடங்கி இருந்தது.
இந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பிரபல பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தலைமையில் மீண்டும் ஒரு அணி தேர்தலில் நிற்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த அணியில் தலைவராக தாணுவும் அவரது அணியில் நிர்வாக பதவிகளில் கமீலா நாசர், டி.ஜி.தியாகராஜன், கேயார் உட்பட பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிட திட்டம்.
தமிழ் சினிமா உலகம் இந்த கொரானா இடர் காரணமாக பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது.
மீண்டும் எப்போது திரையுலகம் வழக்கமான பணிகளை தொடங்கும் என்பதே தெளிவில்லாமல் இருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தாணு பதவியில் இருந்த போது தான் அந்த சங்கத்தில் பல கோடி ரூபாய் டெபாசிட் நிதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இது போன்ற சூழலில் மீண்டும் தாணு தேர்தலில் நிற்க முடிவு செய்துள்ளதால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் சூடு பிடித்து உள்ளது.