Tuesday, December 3
Shadow

கன்னிமாடம் – திரைவிமர்சனம்! – Rank 3/5

உள்ளங்கையில் அடங்கி விட்ட போனில் அடக்கமாகி விட்டது உலகம். அவ்வளவு சுருங்கி விட்ட இதே பூமியில் சாதி ஆதிக்கம் என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக வேர் விட்டு கிளை பரப்பி கோரமாய் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிரடியான நவீன சட்டங்கள், மாறிவரும் வாழ்வியல் பார்வைகள்., சாதி உணர்வையும், அதன் தீவிரத்தையும் முழுமையாக அடக்கி வைக்க முடியவில்லை.

ஒரு விஷயம் தெரியுமா?1990 வரை தமிழக காவல்துறை பதிவுகளில் கவுரவக் கொலை என்ற பதிவை அனேகமாக பார்க்க முடியாது. ஆனால், அப்போதும் கவுரவக் கொலைகள் இல்லாமல் இல்லை. அந்த காலகட்டத்திற்கு முன்பெல்லாம் அப்படி நடக்கும் கொலைகள் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதை பேசவே பயந்த காலமாக இருந்த நிலை மாறி, இன்று அவை விவாதத்திற்கு மட்டுமின்றி, அரசும், நீதிமன்றமும் இதை மிகக்கடுமையாக பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.

இது ஏதோ இந்தியாவில் மட்டும் என்றில்லை. உலகம் முழுமையும் பல நாடுகளில் நடைமுறை யில் உள்ளது. ஐ.நா. சபை 2017-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 28 ஆயிரம் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. அதில் 24 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன. அதே சமயம் பத்தில் ஒன்று தான் பெருவாரியான மக்கள் கவனத்தை பெறுகின்றன என சமூக ஆர்வலர் கள் சொலும் நிலையில் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள கோலிவுட் குயவன் போஸ் வெங்கட் கையால் உருவாகி உள்ள ’கன்னி மாடம்’ என்பது மண் பானை அல்ல.. சகல தரப்பினருக்குமான நீர் வழங்கும் தங்கப் பானையாக்கும்..!

கதை என்னவோ பாரதிராஜாவின் வேதம் புதிது.. பாக்யராஜின் இது நம்ம ஆளு .. கமல்ஹாசனின் சண்டியர்…. விஸ்வரூபம்.. ரஞ்சித்தின் கபாலி … முத்தையாவின் கொம்பன் …. மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் வரிசையில் சாதிய காதல் விவகாரம்தான். ஆனால் திரைகதையாக்கத்தில் ஜெயித்து விட்டார் போஸ் வெங்கட் போஸ்.. அதாவது கீழ் சாதி பொண்ணும் , அவளைக் காதலிக் கும் மேல் சாதி பையனும் திருட்டுத் தாலிக் கட்டிக் கொண்டு சென்னையில் வாழ்க்கையை தொடங்க ஓடி வந்து விடுகிறார்கள் . இதே சென்னையின் ஆட்டோ ஓட்டும் ஸ்ரீராம் கார்த்திக் இந்த ஜோடிக்கு ஆதரவாக இருக்கிறான்..ஏன் அப்படி ஆதரவு கொடுக்கிறான்? அப்புறம் என்னாச்சு? என்பதுதான் கதை..

முக்கிய நாயகனாக வரும் ஸ்ரீராம் கார்த்திக் தொடங்கி மலர் கேரக்டரில் வரும் சாயாதேவி ,கதிர் என்னும் பெயரில் வருகிற விஷ்ணு ராமசாமி ஆகிய மூவரும் அறிமுக நடிகர்களாம்.. அடேங்கப் பா,, பக்கத்து சீட் நண்பர் சொன்னது போல் படம் முடிந்த பின்னரும் இந்த மூவரின் முகம் நினைவில் நிற்கிறது.. அதிலும் சாயாதேவி கண்கள் இந்த கோலிவுட்டில் அடிக்கடி தென்படும். ஸ்ரீராம் கார்த்தியும் இதே போன்ற கதை தேர்வில் கவனம் செலுத்தினால் ஷெட்யூல் டைரி நிரம்பி விடும்..

ஹரி சாய் இசை பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. இனியன் ஜே.ஹாரிஸின் கேமராவும் அருமை.

முன்னொரு காலத்தில் ஆட்டோ டிரைவராக நிஜமாகவே இருந்து இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள போஸ் வெங்கட் இடைவேளைவரை தெளிவாக யோசித்திருக்கிறார். அதன் பின்னரான கதையில் கொஞ்சம் கவனச் சிதறல் செய்து விட்டார். குறிப்பாக ஸ்கொயர் ஸ்டார் கேரக்டர் முன்னிலையில் வலிப்பு வரும் காட்சியும் , க்ளைமாக்சில் அம்மா வாழ்க்கை முடியும் தறுவாயில் அப்பாவை பெயில் அழைத்து வந்து மலர் இருக்குமிடத்தில் விட்டு விட்டு கல்யாணத்துக்கு போய் வருவதெல்லாம் த்ரி மச்..

ஆனாலும் முதலில் கிடைத்த இயக்குநர் வாய்ப்பில் சாதி, ஆணவக் கொலை மாதிரியான சப்ஜெக்டை கையாண்டிருப்பதற்கும், அதை தயாரிக்க முன் வந்த ரூபி பிலிம்ஸ் ஹஷீர்-க்கும் பூங்கொத்து கொடுத்து பாராட்டியே ஆக வேண்டும்..

மொத்தத்தில் கன்னி மாடம் – சமூக விழிப்புணர்வூட்டும் படம்