Saturday, October 12
Shadow

கயிறு – சினிமா விமர்சனம்

ஐ.கணேஷ் இயக்கத்தில் எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் நடிப்பில் வெளியாகி உள்ளது ‘கயிறு’

கிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். அவர் தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் நாயகனை கண்டிக்கிறார். இதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு கூறுகிறார். இதனால் மனமுடையும் நாயகன், தனது பூம் பூம் மாட்டுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, வேறு ஊருக்கு செல்கிறார்.

செல்லும் இடத்தில், அங்கு பூ வியாபாரம் செய்து வரும் காவ்யா மாதவ் நாயகன் மீது காதல் வயப்படுகிறார். இவர்களின் காதலுக்கு நாயகியின் தாயார் எதிர்க்கிறார். மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார். ஆனால் நாயகியோ அவரை திருமணம் செய்ய மறுக்கிறார்.

பின்னர் நாயகியின் காதலுக்கு அவரது தாயார் நிபந்தனையுடன் சம்மதம் தெரிவிக்கிறார். நாயகன் பூம் பூம் மாட்டுக்கார தொழிலை கைவிட்டு, வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை நாயகன் குணா ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் எஸ்.ஆர்.குணா, பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். தன் மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா…கந்தா…’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடித்து இருக்கிறது. நாயகி காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார்.

இயக்குனர் ஐ.கணேஷ் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வித்தியாசமான கதையை மிக அழகாக கையாண்டுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். கிராமத்து யதார்த்தங்களை தன் கதைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான காட்சிகளுடனும், விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், வேகத்தடை போட்டது போல் டூயட்டை வலுக்கட்டாயமாக புகுத்தி இருக்கிறார்.

பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் பிரித்வி. ஜெயன் ஆர் உன்னிதனின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘கயிறு’ சிறந்த படைப்பு.